/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ராகிங்' தடுப்பு; கல்லுாரிகள் தீவிரம்
/
'ராகிங்' தடுப்பு; கல்லுாரிகள் தீவிரம்
ADDED : ஜூலை 04, 2025 11:07 PM
யு.சி.ஜி., எனப்படும் பல்கலை மானியக்குழு அறிவுறுத்தலால், 'ராகிங்' புகார்களுக்கு இடமளிக்காமல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகள் செயல்பட தேவையான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளது.
ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி பல்கலை, கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பல்கலை மானியக் குழுவின் இந்த உத்தரவு மாணவருக்கும், பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கையாக உள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, செவிலியர் பயிற்சி கல்லுாரிகளில் 2022 முதல் ராகிங் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. சீரான இடைவெளியில் கூட்டங்கள் நடத்தி புகார்கள் பெறப்பட்டதா, நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து உயர்மட்ட ஆலோசனை நடக்கிறது. தேவையிருப்பின் போலீசாரின் உதவிகளும் கோரப்படுகிறது.
கல்லுாரியில் திடீர் ஆய்வு
ராகிங் கூடாது என கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டு, அறிவிப்புகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் விடுதிகளை ஆய்வு செய்து, புகார்கள் ஏதேனும் உள்ளதா என பேராசிரியர்கள் குழு தொடர்ந்து கேட்டறிந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் கல்லுாரி, வகுப்பறை, வளாகங்களுக்குள் சோதனை நடத்த தனிக்குழு ஏற்படுத்தி வைத்துள்ளது. இவர்கள் திடீர் ஆய்வுகளின் மூலம் ராகிங் நடக்கிறதா என்பதை ஆராய்வர். மாணவ, மாணவியர் சேர்மன் மூலம் அவர்களுக்கு நேரடியாக பேசி, ஏதேனும் தவறுகள் இருந்தால், தெரிவிக்கும் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
- பத்மினி, முதல்வர் (பொறுப்பு),அரசு மருத்துவக்கல்லுாரி, திருப்பூர்.
தனி கவுன்சிலிங்
'மனம்' எனும் நிகழ்வு மாதம் இருமுறை நடத்தப்படுகிறது. இதில், மாணவர், மாணவியரை தனித்தனியே சந்தித்து மனநல டாக்டர்கள் பேசுகின்றனர். மன, உடல் ரீதியான ஏதேனும் சிரமங்களை சந்திக்கிறீர்களா என கேட்டு, பதில் பெறப்படுகிறது. நேரடியாக புகார் தெரிவிக்காமல், தங்கள் கருத்துகளை மாணவ, மாணவியர் தெரிவிக்க விரும்பினால், டீன், டாக்டர், வார்டன், கல்லுாரி மூத்த பேராசிரியர்கள் மொபைல் எண்களும் வழங்கப்படுகிறது. ராகிங் தொடர்பான ஏதேனும் பிரச்னையில் அவர்கள் சிக்கியிருந்தால், தனி கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது.
- சஞ்சய்போஸ், மன நல மருத்துவர், அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர்.
புகார்கள் இல்லை
கல்லுாரியில் ராகிங் கமிட்டி, கண்காணிப்பு குழு செயல்படுகிறது. அனைத்து மாணவர்களை தனியாகவும், குழுவாகவும் செயல்பாடுகளை கண்காணிக்க மூத்த பேராசிரியர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்தவித புகார்களுக்கும் இடமில்லாமல், கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
- கிருஷ்ணன், முதல்வர், சிக்கண்ணா அரசுகல்லுாரி, திருப்பூர்.