ADDED : மே 14, 2025 11:35 PM

உடுமலை; பெரியகுளம் பகுதியில், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாழை சாகுபடியை பாதுகாக்க, வரப்புகளில் சேலை கட்டும் நடைமுறையை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
உடுமலை அருகே வடபூதனம், பெரியகுளம், வாளவாடி பிரிவு சுற்றுப்பகுதிகளில், கரும்பு, வாழை மற்றும் காய்கறி சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.
சமீபகாலமாக, பெரியகுளம் பகுதியிலும், ஓடைகளுக்கும் இடம் பெயர்ந்துள்ள காட்டுப்பன்றிகள், இரவு நேரங்களில், விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.
காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்கும் வராமல் இருக்க வரப்புகளில், வண்ணச்சேலைகளை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: வாழை சாகுபடிக்கு அதிக செலவு பிடிக்கிறது. பிற மாவட்டங்களில் இருந்து செவ்வாழை, கதளி, ரஸ்தாளி உள்ளிட்ட ரக வாழை கன்றுகளை தருவித்து நடவு செய்துள்ளோம்.
தற்போது வாழைக்கன்றுகள் வளர்ந்து வரும் நிலையில், காட்டுப்பன்றிகள் அவற்றை சேதப்படுத்துகின்றன. மீண்டும் வாழை கன்று நடவு செய்ய அதிக செலவாகிறது. வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.