/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே சுரங்க பாலம் பணி துவக்கம்
/
ரயில்வே சுரங்க பாலம் பணி துவக்கம்
ADDED : பிப் 17, 2024 12:06 AM

உடுமலை;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, உடுமலை பெரியார் நகர் ரயில்வே சுரங்க பாலம் பணி துவங்கியுள்ளது.
உடுமலை நகராட்சியின் தெற்கு பகுதி குடியிருப்புகள் மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சியிலுள்ள, பழனியாண்டவர் நகர், ஜீவா நகர், காந்திபுரம், விஜயகிரி நகர், பி.எம்.சி., நகர், குபேரன் நகர், அருள்ஜோதி நகர், லட்சுமி நகர், கண்ணமநாயக்கனுார் பகுதிகளில் வசிக்கும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, நகரை இணைக்கும் பிரதான வழித்தடமாக பெரியார் நகர் ரயில்வே சுரங்க வழித்தடம் உள்ளது.
பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். கொழுமம் ரோடு, ராமசாமி நகர் ரயில்வே கேட் மூடப்படும் போது, ஆம்புலன்ஸ்கள் உட்பட, அதிகளவு வாகனங்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.
நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு இருந்தாலும், இப்பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், இரு புறமும் உள்ள மழை நீர் வடிகால்களில் கலந்து, முறையான கட்டமைப்பு வசதியில்லாததால், ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்குகிறது.
இதனால், கழிவு நீரை கடந்து வரும் அவல நிலையும், மழை காலங்களில் தேங்கும் மழை நீரில் மிதந்து வரும் நிலையும் இருந்தது.
இந்நிலையில், ரயில்வே சுரங்க பாலத்தில் பணி மேற்கொள்வதற்காக நகராட்சி சார்பில் பெரியார் நகர் பகுதியில் குழி தோண்டப்பட்டது.
தொடர்ந்து பணி நடக்காமல், பல மாதமாக கிடப்பில் போடப்பட்டது. இதனால், பொதுமக்களின் பிரதான வழித்தடம் மறிக்கப்பட்டது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் வெளியானது. இதனையடுத்து, ரயில்வே சுரங்கப்பாலத்தில் நகராட்சி சார்பில் பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.