தமிழக வேளாண் பட்ஜெட்: விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துகள்
தமிழக வேளாண் பட்ஜெட்: விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துகள்
UPDATED : ஆக 07, 2026 06:57 AM
ADDED : ஆக 06, 2026 07:43 PM
பல்லடம்:தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கலானது; இதுகுறித்து விவசாயப்பிரதிநிதிகளின் கருத்துகள்:
செல்லமுத்து, மாநிலத் தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி: சிறுதானியம், உயிர் உரம், விதைப் பண்ணை, பருத்தி, மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், பனை, தென்னை உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அவை விவசாயிகளை முழுமையாக சென்றடையுமா என்பதே கேள்வி. ஆனைமலையாறு-நல்லாறு திட்டம், கள்ளுக்கு அனுமதி, முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி ஆகியவை இடம்பெறாதது ஏமாற்றம்.
ஈஸ்வரன், மாநில ஊடகப் பிரிவு செயலாளர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்: சிறுதானிய உற்பத்திக்கு நேரடி மானியம் வழங்குவதற்கு பதிலாக புதிய கழகம் ஏற்படுத்தி நிதி ஒதுக்கியது தேவையற்றது. தட்கல் மின் இணைப்புக்காக காத்திருப்போருக்கும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கும் எந்த அறிவிப்பும் இல்லை. இது விவசாயிகளை விட அதிகாரிகளுக்கான பட்ஜெட்டாக உள்ளது.
ஈசன் முருகசாமி, நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்: தேர்தல் வாக்குறுதிகளான விவசாயிகள் உரிமைத் தொகை, பால், நெல், கரும்பு கொள்முதல் விலை உயர்வு ஆகியவை இடம்பெறவில்லை. வேளாண் பட்ஜெட்டுக்கான நிதி குறைக்கப்பட்டதற்கான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும். நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லுாரி அறிவிப்பு மட்டும் வரவேற்கத்தக்கது.
சுரேஷ், மாநிலத் துணைத் தலைவர், ஏர்முனை இளைஞர் அணி: பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் பயன் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம். உற்பத்தி மானியத்தை விவசாயிகளுக்கே வழங்க வேண்டும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டம், கள்ளுக்கு அனுமதி, ரேஷனில் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம். விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி வேளாண் பட்ஜெட் தயாரிக்க வேண்டும்.
