ADDED : செப் 19, 2025 10:09 PM
திருப்பூர்; சமுதாய வள பயிற்றுனர் பணியிடத்துக்கு வரும் 24 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
இது குறித்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்ட மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாடு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும்வகையில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் என்கிற துணை அமைப்பு உருவாக்கப்படுகிறது. மாவட்ட அளவில் செயல்படும் உயர்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பு சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு நிதி, நிறுவனங்களை வலுப் படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கும். இந்த சேவைகள் குறித்து பயிற்சி அளிக்க, தகுதியான மகளிர் விண்ணப்பிக்கலாம்.
ஐந்து ஆண்டுகள் அனு பவம் மிக்க சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சமுதாய வள பயிற்றுனர்கள், சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், தொழில் சார்ந்த சமுதாய வள பயிற்றுனர்கள், வட்டார வள பயிற்றுனர்கள், ஒத்த தொழில் குழு, உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்து, பயிற்சி நடத்துவதற்கு, மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவில் ஐந்து முதல் பத்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவராக இருக்க வேண்டும்.
தாங்கள் உறுப்பினராக உள்ள குழுவில், காலம் கடந்த கடன் நிலுவை இல்லாதிருக்க வேண்டும். தர மதிப்பீடு அடிப்படையில், நாளொன்றுக்கு மதிப்பூதியமாக 750 முதல் 500 ரூபாய் வரை வழங்கப்படும்.
சமுதாய வள பயிற்றுனர் பணிக்கான விண்ணப்ப படிவத்தை, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்திலோ அல்லது வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகம், அருள்புரத்திலுள்ள மக்கள் கற்றல் மையம், ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 24 ம் தேதிக்குள், கலெக்டர் அலுவலக வளாக அறை எண்: 305ல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.