/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறக்காமல் பாழாகும் சமுதாய நலக்கூடம்: ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
/
திறக்காமல் பாழாகும் சமுதாய நலக்கூடம்: ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
திறக்காமல் பாழாகும் சமுதாய நலக்கூடம்: ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
திறக்காமல் பாழாகும் சமுதாய நலக்கூடம்: ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம்
ADDED : டிச 04, 2025 06:40 AM

உடுமலை: கிராமங்களில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடங்கள் திறக்கப்படாமல், சமூக விரோத செயல்களின் மையமாக மாறியும், ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், சமுதாய நலக்கூடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணிகள் நிறைவு பெற்றது.
கிராம மக்கள் தங்கள் விசேஷங்களை குறைந்த செலவில் நடத்திக்கொள்ளவும், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பொது அமைப்பினர் கூட்டங்களை நடத்தவும், இந்த சமுதாய நலக்கூடங்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் சமுதாய நலக்கூடங்கள் திறக்கப்படாமல் உள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்தில், பெதப்பம்பட்டி, உடுமலை ஒன்றியத்தில், சின்னவீரம்பட்டி, கொடுங்கியம் கிராமங்களில் இந்த சமுதாய நலக்கூடங்கள் திறக்கப்படாமல் சமூக விரோத மையமாக மாறி வருகிறது.
குறிப்பாக, கொடுங்கியம் கிராமத்தில், இக்கட்டடம் திறந்தவெளி 'பார்' ஆக மாற்றப்பட்டுள்ளது. அருகில் மதுக்கடை இருப்பதால், அனைத்து நேரங்களிலும் சமுதாய நலக்கூடத்தை 'குடி'மகன்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.
புதிய கட்டடத்தின் ஜன்னல் கதவுகளை சேதப்படுத்தியுள்ளனர். சமுதாய நலக்கூடம் முன் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் சமுதாய நலக்கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்காவிட்டால், அக்கட்டடங்கள் முழுவதும் பாழாகி விடும்.
அரசு நிதி முழுமையாக வீணடிக்கப்படும் முன் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

