/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை தொழிலாளர்களுக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு தொகை
/
தென்னை தொழிலாளர்களுக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு தொகை
ADDED : பிப் 04, 2025 08:15 PM
உடுமலை:மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தொழிலாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில், இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், அறுவடை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், நீரா தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வீரிய ஒட்டு ரக தென்னை நாற்று உற்பத்தி பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், தொழிலாளர்கள் பங்களிப்பு, 239 ரூபாய், வாரியம் பங்களிப்பு, 717 ரூபாய் என, மொத்தம் 956 ரூபாய்க்கு காப்பீடு செய்யப்படுகிறது.
மத்திய தென்னை வளச்சி வாரிய மண்டல இயக்குனர் இள அறவாழி, தளி திருமூர்த்திநகர் மத்திய தென்னை மகத்துவ மைய உதவி இயக்குனர் ரகோத்துமன் கூறியதாவது:
தென்னை மரம் ஏறுபவர்கள், அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், 'நம்பிக்கையுடன் தென்னை மரம் ஏறுவோம்' என்ற அடிப்படையில், 'கேரா சுரக்ஷா காப்பீடு' திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதில், இறப்பு, ஊனமடைதல், மருத்துவமனை, மீட்பு நாட்களில் தற்காலிக வருமான உதவி என பயன்கள் உள்ளன. இதுவரை, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு முதல், 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளியின் மருத்துவ சிகிச்சைக்காக, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும், www.coconutboard.gov.in என்ற முகவரியில், விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். மேலும், கோவை மண்டல அலுவலகம், 0422-2993684; தளி தென்னை மகத்துவ மையம் 04252- 265430 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.