ADDED : ஜன 09, 2026 06:02 AM

பல்லடம்: பல்லடம் நகராட்சி அண்ணா நகர் பகுதியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். போதிய வகுப்பறை மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், பள்ளியை வேறு இடத்தில் கட்டித் தர வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனால், அண்ணா நகர் சமுதாய நலக்கூடம் அருகே புதிய பள்ளி கட்டடம் கட்டுமான பணி கடந்த ஆண்டு துவங்கியது.
நபார்டு நிதியுடன், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளம் என, மொத்தம், 10 வகுப்பறைகளுடன் கட்டப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்துக்கு முன்பக்கம் மட்டுமே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக அமைக்க வேண்டும் என, பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:
ஏற்கனவே உள்ள பழைய பள்ளி கட்டடத்தில் போதிய அடிப்படை வசதி இல்லை என்பதால் தான், புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இங்கு, அனைத்து வசதிகளையும் முழுமையாக செய்தால்தான், எதிர்வரும் நாட்களில் எந்த இடையூறும் இன்றி மாணவர்கள் படிக்க முடியும்.
ஆனால், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்துக்கு, சுற்றுச்சுவர் முழுமையாக அமைக்கப்படவில்லை. இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால், 'நிதி ஒதுக்கிய அளவுக்கு தான் கட்ட முடியும்,' என்கிறார். சுற்றுச்சுவர் முழுமையாக இல்லையெனில், சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, முழுமையான சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
