/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமையிழக்கும் தேசிய நெடுஞ்சாலை; கருகும் மரங்களால் கவலை
/
பசுமையிழக்கும் தேசிய நெடுஞ்சாலை; கருகும் மரங்களால் கவலை
பசுமையிழக்கும் தேசிய நெடுஞ்சாலை; கருகும் மரங்களால் கவலை
பசுமையிழக்கும் தேசிய நெடுஞ்சாலை; கருகும் மரங்களால் கவலை
ADDED : ஜூன் 12, 2025 10:07 PM

உடுமலை; கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட மரங்கள் கருகி, அப்பகுதி பசுமையிழந்து வருகிறது.
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகர எல்லையில் இருந்து அந்தியூர் வரை, ரோட்டின் இருபுறங்களிலும், நுாற்றுக்கணக்கான புளியமரங்கள் இருந்தன.
நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை கண்காணித்து, பராமரிப்பும் செய்து வந்தனர்; இதனால், புறநகர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையே பசுமையாக காட்சியளித்தது.
இந்நிலையில், நான்கு வழிச்சாலை பணிக்காக, ராகல்பாவி பிரிவு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் அகற்றப்பட்டன. மீதமுள்ள மரங்களும் தற்போது பராமரிப்பின்றி, கருகி வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், குப்பையை குவித்து வைத்து, தீ வைத்து எரிப்பது மரங்கள் அழிய முக்கிய காரணமாக உள்ளது. மேலும், விளம்பர பலகைகள் மாட்ட, மரங்களில் பெரிய ஆணிகளை அடித்து அகற்றாமல் விடுகின்றனர். இதனால், பாதிக்கும் மரங்கள் படிப்படியாக கருகி விடுகிறது.
இவ்வாறு, தேசிய நெடுஞ்சாலையில் மட்டும், 50க்கும் மேற்பட்ட மரங்கள் கருகி வருகின்றன; நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு செய்வதில்லை. படிப்படியாக தேசிய நெடுஞ்சாலை பசுமையிழந்து பரிதாப நிலைக்கு மாறி வருகிறது.
கருகிய மரங்களுக்கு மாற்றாக புதிதாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். தீ வைத்தல் உள்ளிட்ட காரணங்களால் மரங்கள் பட்டு போவதை தடுக்க, நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
மேலும், சுயநலத்துக்காக மரங்களை காய வைப்பவர்கள் குறித்தும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். தென்மேற்கு பருவமழை சீசனில் ரோட்டின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடவும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.