/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள் பறிமுதல்
/
தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள் பறிமுதல்
ADDED : டிச 04, 2024 10:54 PM

திருப்பூர்; தடை செய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை குறித்து, திருப்பூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்; 330 கிலோ பூண்டு பறிமுதல் செய்தனர்.
விலை குறைவென எண்ணி, மக்கள் பலரும் சீன பூண்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இவை ஆபத்தானவை என்று உணர்வதில்லை. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழகம் முழுவதும் சீன பூண்டு விற்பனை குறித்த ஆய்வை துவக்கியுள்ளனர்.
திருப்பூரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், இளங்கோவன், ஆறுச்சாமி, ரமேஷ் குழுவினர், நேற்று தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி பூண்டு மொத்த வியாபார குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறியதாவது:
ஆய்வில், ஒரு கடையில், 15 கிலோ கொண்ட 22 மூட்டைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீன பூண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூண்டு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக்காக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டங்களில் மொத்த மற்றும் சில்லரை வர்த்தகர்கள், தடை செய்யப்பட்ட பூண்டு விற்பனை செய்யக்கூடாது; பொதுமக்களும் விழிப்புணர்வுடன், பூண்டு வாங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
---
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் உள்ள பூண்டு குடோன்களில் ஆய்வு நடத்தினர்.