/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே பெயரிலுள்ள வாக்காளர்கள் பெயரை நீக்கும் அறிவிப்பால் குழப்பம்
/
ஒரே பெயரிலுள்ள வாக்காளர்கள் பெயரை நீக்கும் அறிவிப்பால் குழப்பம்
ஒரே பெயரிலுள்ள வாக்காளர்கள் பெயரை நீக்கும் அறிவிப்பால் குழப்பம்
ஒரே பெயரிலுள்ள வாக்காளர்கள் பெயரை நீக்கும் அறிவிப்பால் குழப்பம்
ADDED : டிச 03, 2024 11:48 PM
பல்லடம்; பல்லடத்தில், ஒரே பெயரில் உள்ள வாக்காளர் பெயரை நீக்கும் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல், தேர்தல் பிரிவு இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம், கடந்த மாதம், 16, 17 மற்றும் 23, 24ம் தேதிகளில் நடந்தது.
இதன் மூலம், பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, நவ., 28ம் தேதி கடைசி கட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
டிச., 26ம் தேதிக்குள் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 6ம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இரட்டை பதிவு மற்றும் நீக்கப்பட வேண்டிய வாக்காளர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு இது குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டையில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வந்த அறிவிப்பு கடிதங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
ஒரே பெயரில் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதாகவும், அவற்றை நீக்கும்படியாகவும், தேர்தல் பிரிவில் இருந்து கடிதம் வந்துள்ளது. ஒரே பெயரில், பல்வேறு ஊர்களில் உள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களும் இத்துடன் அனுப்பப்ட்டுள்ளன.
ஆனால், அவற்றில் உள்ள பெயர்கள் மட்டுமே ஒன்றாக உள்ள நிலையில், தந்தை, கணவர் பெயர், போட்டோ உள்ளிட்டவை வேறு வேறாக உள்ளன. அவற்றை நாங்கள் எவ்வாறு நீக்க முடியும்? தேர்தல் பிரிவின் இந்த அறிவிப்பு கடிதம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.