போக்குவரத்து விதிகளை அமல்படுத்தினால் நெரிசல் குறையும் ! நகரிலுள்ள ரோடுகளில் நகர முடியாத அவலம்
போக்குவரத்து விதிகளை அமல்படுத்தினால் நெரிசல் குறையும் ! நகரிலுள்ள ரோடுகளில் நகர முடியாத அவலம்
UPDATED : ஜூலை 14, 2026 04:01 PM
ADDED : ஜூலை 14, 2026 04:00 PM

உடுமலை: நகரின் பிரதான ரோடுகளில் பார்க்கிங் விதிமீறல், தற்காலிக ஆக்கிரமிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், அனைத்து ரோடுகளிலும் நெரிசல் பல மடங்கு அதிகரித்து போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. உடுமலை போக்குவரத்து போலீசார் உரிய கவனம் செலுத்தி, அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகியுள்ளது. உடுமலை நகரம், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையையொட்டி பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், சந்தை என வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகள் அமைந்துள்ளன.
நெடுஞ்சாலை போக்குவரத்துடன், நகர வாகன போக்குவரத்தும் இணையும் போது நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
நோ பார்க்கிங்! பிரதான ரோடுகளில் நெரிசலுக்கு, தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் முக்கிய காரணமாகியுள்ளன. பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து, கல்பனா ரோடு சந்திப்பு வரை, நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர்.
சென்டர் மீடியனும், ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் இடையே குறுகலான பகுதியில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டியுள்ளது.
ரவுண்டானாவில் இருந்து நடை மேம்பாலம் வரை, அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதியில் பாதாசாரிகளும் ரோட்டை கடப்பதால் சிக்கல் அதிகரிக்கிறது.
காலை, மாலை நேரங்களில், பஸ் ஸ்டாண்டில் இருந்து தளி ரோடு சிக்னல் வரை, அதிக நெரிசல் நிலவுகிறது. போக்குவரத்து போலீசார் விதிகளை மீறி ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதே போல், தாஜ் ரோடு சந்திப்பு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை, இதே பிரச்னை உள்ளது. பார்க்கிங் பகுதி வரையறை செய்யப்பட்டு, அதை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு முன்பு அபராதம் விதித்து வந்தனர்.
அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. கச்சேரி வீதி, டி.எஸ்.பி., அலுவலக ரோடு, பசுபதி வீதி, ராஜேந்திரா ரோடு என அனைத்து ரோடுகளிலும் 'பார்க்கிங்' விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
இதே போல், பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒருவழிப்பாதையில், விதிகளை மீறி இருசக்கர வாகன ஓட்டுநர்கள் செல்கின்றனர். தாஜ் ரோடு சந்திப்பு வரை நேர் எதிரே வரும் வாகனங்களால், பிற வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
இதையும் பாருங்க திருப்பூர் ரோட்டில் வாரந்தோறும் ரோட்டோர சந்தை நடத்தப்படுகிறது. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களால், நெரிசல் ஏற்படுகிறது.
மாரியம்மன் கோவில் அருகே தள்ளுவண்டி கடைகளுக்கு வருபவர்கள், ரோட்டையொட்டி வாகனங்களை நிறுத்திக்கொள்வதால், நெடுஞ்சாலையில் நெரிசல் ஏற்படுகிறது.
உழவர் சந்தை, தினசரி சந்தை, வெங்கடகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட ரோடுகளில் இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது. போக்குவரத்து போலீசார் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்காலிக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி இணைந்து அகற்றினால் மட்டுமே நகர போக்குவரத்து நகராமல் இருக்கும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
