/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி உயர்வுக்கு எதிராக காங்., - கம்யூ., கட்சிகள் இன்று போராட்டம்
/
சொத்து வரி உயர்வுக்கு எதிராக காங்., - கம்யூ., கட்சிகள் இன்று போராட்டம்
சொத்து வரி உயர்வுக்கு எதிராக காங்., - கம்யூ., கட்சிகள் இன்று போராட்டம்
சொத்து வரி உயர்வுக்கு எதிராக காங்., - கம்யூ., கட்சிகள் இன்று போராட்டம்
ADDED : டிச 09, 2024 04:58 AM
திருப்பூர் : மாநகராட்சி சொத்து வரி உயர்வுக்கு எதிராக தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
கடந்த மாதம் நடந்த திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க.,வினர் சொத்து வரி உயர்வைக் கண்டித்து, கருப்பு சட்டை அணிந்தும், தலையில் முக்காடிட்ட படியும் போராட்டம் நடத்தினர். மேயரை முற்றுகையிட்டும், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
த.மா.கா., மற்றும் தி.மு.க., கூட்டணிக் கட்சியான கம்யூ.,- காங்.,கவுன்சிலர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க., வினரும் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்து, கைதாகினர். மறியலைக் கலைக்க முயன்ற போது, கம்யூ.,வினர் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. மறியல் போராட்டத்துக்குப் பின்னரும், அ.தி.மு.க., நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின்னரும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., -இந்திய கம்யூ., - மா.கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் ஆகிய கூட்டணிக் கட்சியினர் இரு கட்டமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.அக்கூட்டங்களின் முடிவுப்படி, இன்று(9ம் தேதி) சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி இக்கட்சியினர், மாநகராட்சி சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், கடந்த 4ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைப்பினர் முடிவின்படி அனைத்து கடைகளிலும் 10 நாட்களுக்கு கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்பது; போராட்டம் குறித்து துண்டுப் பிரசுரம் வினியோகிப்பது; வரும் 18ம் தேதி திருப்பூரில் முழு கடை அடைப்பு நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, த.மா.கா., சார்பில் கடந்த 7ம் தேதி, உண்ணாவிரதம் நடத்த அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சொத்து வரி உயர்வு குறித்த பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து தெளிவான எந்த கருத்தும் இல்லை. தேர்தல் மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே இவை நடத்தப்படுகிறது. இது திருப்பூருக்கு மட்டுமான பிரச்னை இல்லை; ஒட்டுமொத்தமான மாநிலத்துக்கு உள்ள பிரச்னை. இதில் அரசு தான் உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.