ADDED : அக் 25, 2025 01:27 AM

திருப்பூர்: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்ட ஒற்றைத் தாள் தீர்மானம் குறித்து காங்., - கம்யூ., கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாநகராட்சி மன்ற சிறப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை பணி குறித்து அவசர தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த மன்ற கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்று கடைசி நேரத்தில் ஒற்றைத் தாள் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. கூட்டம் துவங்கிய பின்னர் இது குறித்த தகவல் தீர்மான நகலாக கவுன்சிலர்களுக்கு விநியோகக்கப்பட்டது.
வீரபாண்டி பகுதியில் தனியார் அமைத்துள்ளபுதிய லே அவுட்டுக்கு அங்கீகாரம் வழங்கும் தீர்மானமாக இதுஇருந்தது. இத்தீர்மானம் மீது பேசிய காங்., கவுன்சிலர் செந்தில்குமார்,'இந்த தீர்மானம் ஒற்றைத் தாள் தீர்மானமாக கடைசி நேரத்தில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன.
ஒத்தி வைக்கப்பட்ட தீர்மானம் என்றால், பல பேர் வாழ்வாதாரம் தொடர்பான மார்க்கெட் மற்றும் பஸ் ஸ்டாண்ட் கடைகள் குறித்த தீர்மானம் ஏன் கொண்டு வரவில்லை. ஒற்றைத் தாள் தீர்மானம் ஏற்புடையதல்ல. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்' என்றார்.
பதில் அளித்த மேயர், 'இத்தீர்மானம் கடந்த கூட்டத்தில் கவுன்சிலர் அருணாசலம் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. கடைகள் ஏல விவகாரத்தில் பல்வேறு அலுவல் ரீதியான நடைமுறைகள் முடிவடையாமல் உள்ளது' என்றார்.இதனிடையே ஒற்றைத் தாள் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பிரச்னை என, செந்தில்குமாரிடம் கம்யூ., கவுன்சிலர்கள் கேள்வியெழுப்பி, அதில் எந்த தவறும் இல்லை என்றனர்.
பல காலமாக கவுன்சிலர் பதவியில் உள்ளதாக கூறும் உங்களுக்கு இது குறித்து கூடத் தெரியாதா என செந்தில்குமார் கேள்விக்கணை தொடுக்க இரு தரப்பினரிடையே சில நிமிடங்கள் காரசாரமான வாக்குவாதம் நடந்தது.

