/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜங்ஷனில் டூவீலர் ஸ்டாண்ட் கட்டும் பணி தீவிரம்
/
ஜங்ஷனில் டூவீலர் ஸ்டாண்ட் கட்டும் பணி தீவிரம்
ADDED : செப் 22, 2024 05:47 AM

திருப்பூர்,: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இழுபறியாக இருந்த வந்த டூவீலர் ஸ்டாண்ட் கட்டும் பணி மெல்ல சுறுசுறுப்பாகியுள்ளது.
'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ், திருப்பூர், ரயில்வே ஸ்டேஷனில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி ஓராண்டாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வெளி வளாகத்தில் விரிவு படுத்தப்பட்ட டூவீலர் ஸ்டாண்ட், 'மல்டி லெவல் பார்க்கிங்' அமைக்க திட்ட மிடப்பட்டது. பழைய ஸ்டாண்ட் காலி செய்யப்பட்டு, அளவீடு பணி முடிந்தும், நான்கு மாதங்களாக பணி நடக்காமல் இழுபறி தொடர்ந்தது.
ஆய்வு நடத்திய தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் பயணிகள் அவசிய தேவையான பணிகளை வேகப்படுத்தி முக்கியத்துவம் தர வேண்டும் என உத்தரவிட்டனர். இதனையடுத்து, ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் டூவீலர் ஸ்டாண்ட் கட்ட இரும்பு துாண்கள் நிறுவப்பட்டு, தரைத்தளத்துக்கான கான்கிரீட் கலவை போடும் பணி நேற்று நடந்தது.
வாகன ஓட்டிகள் கூறுகையில், 'கட்டுமான பணி துவங்கி, ஓராண்டாகிறது. வார இறுதி நாட்களில், டூவீலர்களை நிறுத்த இடமில்லாத நிலை தொடர்கிறது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டில் மேற்கூரை இல்லாததால், நாள் முழுதும் வாகனங்கள் வெயில் காய்கிறது; மழை வந்தால் நனைகிறது. புதிய டூவீலர் ஸ்டாண்ட் கட்டும் பணியை வேகப்படுத்தி, விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.