ADDED : பிப் 05, 2026 04:46 AM

பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு, தினமும், 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இத்துடன், டவுன் பஸ் மற்றும் மினி பஸ்களும் செல்கின்றன.
பஸ்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ரேக்குகளில் கட்டடக் கழிவுகள் நிரம்பி இருப்பதால், பஸ்கள் நிறுத்துவதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. முன்னதாக, பஸ் நிறுத்தும் ரேக்குகள் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் இப்பணிகள் நிறைவடைந்துவிட்டன.
பணிகள் முடிந்த பின், கட்டடக் கழிவுகள் அகற்றப்படாமல், ரேக்குகளுக்குள் குவியல் குவியலாக கிடக்கின்றன. இதனால், பஸ்கள் நிறுத்த இடம் இன்றி, வழியிலேயே நிற்பதால், தேவையற்ற நெரிசல் மற்றும் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. ரேக்குகளுக்குள் இருக்கும் கட்டட கட்டுமான கழிவுகளை அகற்றி பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
