ADDED : ஏப் 18, 2025 06:49 AM
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், உடுமலை ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள நுாற்றுக்கணக்கான குவாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.
இதனால், கருங்கல், ஜல்லி, எம். சாண்ட் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனை முற்றிலும் தடைப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் இப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அரசு ஒப்பந்த வளர்ச்சித் திட்டப்பணிகள்; தனியார் கட்டுமானப் பணிகளில், கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் ஆகியன பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சில கட்டுமானங்கள் தவிர, பெரும்பாலான பணிகளில் தினமும் கொண்டு வரப்படும் இந்த கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கூடுதல் அளவில் கட்டுமானப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
வேலை நிறுத்தம் காரணமாக கட்டுமானப் பொருட்கள் இன்றி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும் இருப்பு வைத்துள்ள இடங்களில் 5 முதல் 7 நாள் வரை நடக்கும் பணிக்கான பொருட்கள் இருப்பில் இருக்க வாய்ப்புள்ளது.
அவற்றிலும் இன்னும் இரண்டொரு நாளில் இவை தீர்ந்து பணிகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் கட்டுமானத்துறையினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.