15 ஆண்டாக நீடித்த இழுபறி சுரங்க பாலம் திறப்பு எப்போது?
15 ஆண்டாக நீடித்த இழுபறி சுரங்க பாலம் திறப்பு எப்போது?
UPDATED : மே 16, 2026 07:13 AM
ADDED : மே 15, 2026 08:11 PM

திருப்பூர்:திருப்பூரின் பிரதான பகுதியாக உள்ள குமரன் ரோட்டின் குறுக்கில், எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் அமைந்துள்ளது. இந்த இடத்தில் நொய்யல் ஆற்றின் கரையை ஒட்டி, வெள்ளி விழா பூங்கா ரோடு உள்ளது. இந்த ரோட்டையும், யுனிவர்சல் சந்திப்பு பகுதியையும் இணைக்கும் வகையில், குமரன் ரோட்டின் குறுக்கில் சுரங்க பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
ஏறத்தாழ 15 ஆண்டுகள் முன் திட்டமிட்டு துவங்கிய இந்த சுரங்க பாலம் கட்டும் பணி, பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து தடைப்பட்டது. இதனால், ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுரங்க பாலம் பணி மேற்கொண்டு தொடராமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுக் கிடந்தது.
கட்டுமானப் பணிக்கான தடைகள் நீங்கி, பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டு கடந்தாண்டு, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் துவங்கின. அவ்வகையில் கடந்த இரு மாதம் முன்னர் குமரன் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பிரதான பகுதியில் சுரங்க பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் போக்குவரத்து முந்தைய வழக்கப்படி துவங்கியது. சுரங்க பாலம் கட்டுமானப் பணி கடந்த மார்ச் மாதம் நிறைவுற்று போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கட்டுமானப் பணி முடிவடைந்தும், தேர்தல் அறிவிப்பு காரணமாக இதன் திறப்பு விழா நடப்பது தாமதமானது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால், சுரங்க பாலத்தை திறந்து வாகனப் போக்குவரத்துக்கு விரைவில் அனுமதிக்க வேண்டும்.
