கட்டுமான பணி முடிஞ்சாச்சு... எப்போது திறப்பது என்பதே பேச்சு! 20 ஆண்டாக கட்டப்பட்ட அணைப்பாளையம் பாலம்
கட்டுமான பணி முடிஞ்சாச்சு... எப்போது திறப்பது என்பதே பேச்சு! 20 ஆண்டாக கட்டப்பட்ட அணைப்பாளையம் பாலம்
UPDATED : மே 16, 2026 07:06 AM
ADDED : மே 15, 2026 08:11 PM

திருப்பூர் : காலேஜ் ரோடு அணைப்பாளையம் ரயில்வே பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க மா.கம்யூ. வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பூர் நகர மா.கம்யூ. செயலாளர் நந்தகுமார், கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளருக்கு அனுப்பிய மனு:
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிள் கடந்த, 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2006ம் ஆண்டு இப்பணி திட்டமிடப்பட்டு துவங்கியது. அப்போது நிலம் எடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள், கோர்ட் வழக்குகள் என இப்பணி நீண்ட காலம் தடைபட்டுக் கிடந்தது. இதனால், 11 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் கிடந்த கட்டுமானப் பணி 2017 ல் ஒரு பகுதியில் துவங்கி நடந்தது. அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட்டு, மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்கி, நொய்யல் ஆற்றின் மீதும், ரயில்வே பாதையைக் கடந்து அணைப்பாளையம் பகுதியிலும் கட்டுமானப் பணி நடந்தது. இப்பணி ஆறு மாதத்தில் நிறைவடையும் என 2021ல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், 5 ஆண்டு கடந்து தற்போது தான் நிறைவுக்கு வந்துள்ளது. பாலத்தின் தெற்கு பகுதியில் அணுகு சாலை மிகவும் குறுகலாக உள்ளது.
அதனை சரி செய்ய வேண்டும். மேலும் தற்போது பாலம் கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ள நிலையில், அதை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து அவதி மற்றும் நெருக்கடி குறையும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
