ADDED : பிப் 22, 2026 06:31 AM
இந்தியாவிலேயே, கன்டெய்னர் உற்பத்தி துவங்கும் போது, உள்நாட்டு தரைவழி சரக்கு போக்குவரத்து செலவு, 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது; ஏற்றுமதிக்கான கன்டெய்னர் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும் என, தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 95 சதவீதம் கப்பல் வாயிலாகவே நடந்து வருகிறது. குறிப்பாக, துாத்துக்குடி துறைமுகம் எடுத்துச்சென்று, வரிவிவகாரங்களை சரிபார்த்த பின், கன்டெய்னரில் ஏற்றி, அனுப்பி வைக்கப்படுகிறது. துாத்துக்குடி துறைமுகத்தில் பொருட்கள் இறக்குமதியாகும் போது, கன்டெய்னர்களை பெற்று, சுத்தம் செய்து, ஏற்றுமதி சரக்குகள் அதன் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சீனாவை சேர்ந்த முக்கிய நிறுவனங்களே, வாடகை அடிப்படையில், கன்டெய்னர் சேவையை அளிக்கின்றன. வாடகை கொடுத்த தயாராக இருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத நேரத்தில், கன்டெய்னர் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கியும், சில நாடுகள் குளிர்காய்கின்றன. கன்டெய்னர் இல்லாதபோது, விமானத்தில் சரக்கு அனுப்ப, மூன்று மடங்கு செலவு அதிகமாகும்; அவசர தேவைக்காக, அப்படி செய்ய வேண்டிய நெருக்கடியும் அவ்வப்போது வருகிறது.
கடந்த கொரோனா தொற்றின் போதுதான், கன்டெய்னர் தட்டுப்பாடு என்ன என்பதை முழுமையாக அறிய முடிந்தது. உலக நாடுகள் ஸ்தம்பித்திருந்த போது, எவ்வித இறக்குமதியும் நடக்கவில்லை. ஏற்றுமதிக்கான சரக்குகள், கன்டெய்னர் கிடைக்காமல், பல மாதங்கள் தேங்கிக்கிடந்தன. அவற்றை அனுப்பி வைக்க ஏற்றுமதியாளர்கள் மெனக்கெட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போதிருந்துதான், இந்தியாவிலேயே, கன்டெய்னர் உற்பத்தியை துவக்க வேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்து, தொழில்துறையினர் குரல்கொடுத்தனர். மத்திய அரசும், அவ்வப்போது இதுதொடர்பாக விரிவாக பரிசீலித்து வந்தது. அதன் எதிரொலியாக, தற்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், கன்டெய்னர் உற்பத்தி துவக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பு நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக, தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உள்நாட்டு கப்பல் சரக்கு
போக்குவரத்து மேம்படும்
துாத்துக்குடி சரக்கு முனைய நிறுவன பங்குதாரர் கண்ணன் கூறியதாவது:
கன்டெய்னர் உற்பத்தி செய்யும் போது, உள்நாட்டு சரக்கு போக்குவரத்துக்கு பயன்படும். மும்பை, குஜராத், வைஷாக் போன்ற துறைமுகங்கள் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் போது பயன்படுத்த அரசு திட்டமமிட்டுள்ளனர். ரோடு வழி சரக்கு போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், நீர்வழித்தடத்தில் சரக்கு அனுப்பும் போது, 30 முதல் 40 சதவீதம் சரக்கு போக்குவரத்து செலவு குறையும்.
சமீப காலமாக, துாத்துக்குடி துறைமுகத்துக்கு, குஜராத் மாநிலம், முந்த்ராவில் இருந்து, 'டைல்ஸ்' கற்கள், கப்பல்களில் சரக்கு வருவது அதிகரித்துள்ளது. பாதுகாப்பாக, குறித்த காலத்தில் வந்து சேரும். 'சாகர் மாலா' திட்டத்தில், சிறிய துறைமுகங்களுக்கு இடையே சிறிய கப்பல் இயக்கப்படும். அதுதான், புதிய நீர்வழித்தடங்கள் என்கின்றனர்.
ஏற்றுமதிக்கான கன்டெய்னர்களுக்கு எப்போதும் தட்டுப்பாடு வராது; ஏதாவது ஒரு நேரம் மட்டுமே தட்டுப்பாடு ஏற்படுகிறது. தற்போது எவ்வித பிரச்னையும் இல்லை. வெளிநாட்டு கன்டெய்னர்களை குறிப்பிட்ட ஆண்டுக்கு பிறகு கழித்துவிடுகின்றனர்; அவற்றை வாங்கித்தான், உள்நாட்டு கப்பல் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறோம். இனி, சொந்தமாக கன்டெய்னர் தயாரிக்கும் போது, உள்நாட்டு கப்பல் சரக்கு போக்குவரத்து மேம்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

