/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டுக்கூடு உற்பத்தியில் தொடர் பாதிப்பு; தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
/
பட்டுக்கூடு உற்பத்தியில் தொடர் பாதிப்பு; தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
பட்டுக்கூடு உற்பத்தியில் தொடர் பாதிப்பு; தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
பட்டுக்கூடு உற்பத்தியில் தொடர் பாதிப்பு; தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 20, 2025 10:25 PM
உடுமலை; பட்டுக்கூடு உற்பத்தி, பல்வேறு காரணங்களினால் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணபட்டு வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டு வளர்ச்சித்துறை இயக்குநரிடம் மனுக்கொடுத்தனர்.
தமிழகத்தில், பட்டுக்கூடு உற்பத்தியில், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக, முட்டை மற்றும் இளம் புழுக்கள் தரமில்லாதது, இடுபொருட்கள், தளவாட பொருட்கள் விலை ஏற்றம், பட்டுக்கூடு விலை சரிவு, பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால், பட்டுப்புழு வளர்ப்பில் தொடர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தீர்வு காண வலியுறுத்தி, பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் சாந்தியிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு வித்தகத்திலிருந்து தரமான முட்டை வினியோகம் செய்ய வேண்டும். இளம் புழு வளர்ப்பு மையத்தில் முட்டை பொரித்த நாளிலிருந்து, உதவி இயக்குனர் தலைமையில் ஆய்வு செய்து, தரமான புழுக்கள் என்பதை உறுதி செய்து, சான்று வழங்கிய பின், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
பட்டுக்கூடு அங்காடிகளில், ஏலம் நடக்கும் போது உதவி இயக்குனர் ஆய்வு செய்து, உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கிலோ பட்டு கூடுக்கு அடிப்படை விலையாக, ரூ.700- நிர்ணயம் செய்ய வேண்டும்.
பட்டு விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் எடுத்து கூற களப்பணியாளர்கள் தோட்டங்களுக்கும், பண்ணைகளுக்கும் வருவதை உறுதி செய்வதோடு, 'ஜிபிஎஸ்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
கடந்த, 2024 செப்.,15ல், காப்பீடு திட்டம் காலாவதியாகிவிட்டது. 10 மாதங்களாக புதுப்பிக்கப்பாததால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
இளம் புழுக்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும்போது 'லாட்' எண், பொரித்த தேதி வருகிறது. அதே போல், சோதனை செய்யப்பட்ட விபரம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
முட்டை மற்றும் இளம் புழு மையம் ஆகிய இடங்களிலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்கும் வரை உள்ள நடைமுறை விபரங்களை, 'உழவன்' மொபைல் செயலியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை பகுதியில் ஏற்படுத்த வேண்டும்.
தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப, தொழில்நுட்ப கூட்டங்கள் நடத்துவதில்லை. தேனியில் அரசு நூற்பாலையை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
மானிய திட்டங்களில், 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய விவசாயிகள் பயனடையும் வகையில், புழு வளர்ப்பு மனைக்கு மறு சீரமைப்பு நிதி, தொழில்நுட்ப கருவிகள் கிடைக்க செய்ய வேண்டும்.
சில மாவட்டங்களில் விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் தளவாடப்பொருட்கள் இன்னும் வழங்கவில்லை. பட்டு வளர்ச்சித்துறையின் இயக்குநர் வெளியீடு செய்த அங்காடி கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை உடனடியாக அனைத்து அங்காடிகளிலும் அமல்படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து அங்காடிகளிலும் விவசாயிகளுக்கு தெரியும் வகையில் விதிமுறைகளுக்கான அறிவிப்பு இருப்பதில்லை. விதிமுறைகளை கடைபிடிக்காத துறையினர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவும், பட்டு விவசாயிகளை பாதுகாத்து, அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.