/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கறிக்கோழி, முட்டை கோழி பண்ணைகளில் தொடர் ஆய்வு தேவை! சுகாதாரத்துறை களமிறங்க வலியுறுத்தி மனு
/
கறிக்கோழி, முட்டை கோழி பண்ணைகளில் தொடர் ஆய்வு தேவை! சுகாதாரத்துறை களமிறங்க வலியுறுத்தி மனு
கறிக்கோழி, முட்டை கோழி பண்ணைகளில் தொடர் ஆய்வு தேவை! சுகாதாரத்துறை களமிறங்க வலியுறுத்தி மனு
கறிக்கோழி, முட்டை கோழி பண்ணைகளில் தொடர் ஆய்வு தேவை! சுகாதாரத்துறை களமிறங்க வலியுறுத்தி மனு
ADDED : ஜூன் 26, 2025 09:53 PM

உடுமலை; 'கோழிப்பண்ணைகளில், சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல், ஈக்கள் பெருக்கமடைந்து, அருகிலுள்ள குடியிருப்புகள் பாதிப்பதாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்; இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும்,' என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. குடிமங்கலம் வட்டாரத்தில் புதிதாகவும் தொடர்ந்து பண்ணைகளை அமைத்து வருகின்றனர்.
இதில், சில பண்ணைகள் கிராம குடியிருப்புகளின் அருகில் அமைந்துள்ளதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, குடிமங்கலம் ஒன்றியம், வெள்ள செட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் கோழி பண்ணையால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக, மக்கள் தொடர் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் விவேகானந்தன், அருண்குமார் உள்ளடக்கிய குழுவினர், கோழிப்பண்ணையில் ஆய்வு செய்தனர்.
நோட்டீஸ் வழங்கல்
பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, பொது சுகாதார சட்டபிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, உரிமையாளர் தங்கவேலுவிடம் நேரடியாக நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
மேலும், 'பண்ணை வளாகத்தில், கோழி இறகுகள், கழிவுகளை வாரம் ஒரு முறை சுகாதார முறையில் அப்புறப்படுத்த வேண்டும்; முதிர் ஈக்களை கட்டுப்படுத்த நாள்தோறும் இருமுறை ஈ கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும் எனவும், மறு ஆய்வின் போது, குறைபாடுகள் மீண்டும் கண்டறியப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்படும், என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், பெரியபட்டி, குப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இத்தகைய பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், குறிப்பிட்ட நாட்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது. மீண்டும் அப்பிரச்னை தொடர்கதையாகி விடுகிறது.
குறிப்பாக பண்ணைகளில் இருந்து உற்பத்தியாகி, பெருகும் ஈக்களால் கிராமங்களில் மக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். உணவு பண்டங்களில் மொய்க்கும் ஈக்களால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்பும் உள்ளது.
மழைக்காலங்களில் பண்ணை அருகில் எழும் துர்நாற்றம், ஈக்கள் பரவல், கழிவு நீரை திறந்தவெளியில் வெளியேற்றுவதால், சுகாதார சீர்கேடுகள் தொடர்கதையாக உள்ளது.
இது குறித்து ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர் பாதிப்புகளால், மக்கள் போராடும் போது, பண்ணையாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, வட்டார சுகாதாரத்துறையினர் கறிக்கோழி மற்றும் முட்டை கோழி பண்ணைகளில், தொடர் ஆய்வு நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆய்வின் வாயிலாக, பண்ணையாளர்களுக்கும், சுகாதார விதிமுறைகள் குறித்து தெளிவாக தெரியவரும்; நோய்க்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றலாம்.
அதே வேளையில் அருகிலுள்ள குடியிருப்பு மக்களுக்கும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். இல்லாவிட்டால், கோழிப்பண்ணை செயல்படும் பகுதிகளில், மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்னை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பாதிப்பு உள்ள பகுதிகளை பட்டியலிட்டு சமூக ஆர்வலர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.