/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒப்பந்த பணியாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் இல்லை: சார் பதிவாளர் அலுவலகங்களில் அவலம்
/
ஒப்பந்த பணியாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் இல்லை: சார் பதிவாளர் அலுவலகங்களில் அவலம்
ஒப்பந்த பணியாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் இல்லை: சார் பதிவாளர் அலுவலகங்களில் அவலம்
ஒப்பந்த பணியாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் இல்லை: சார் பதிவாளர் அலுவலகங்களில் அவலம்
ADDED : அக் 28, 2025 01:18 AM
திருப்பூர்: தமிழகம் முழுவதும் பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த நிறுவன பணியாளர்களுக்கு கடந்த ஒன்பது மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் 585 பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. பத்திரப்பதிவு உள்ளிட்ட பதிவுகள் தொடர்பான பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. அலுவலகங்களில் டேட்டா ஆபரேட்டர் மற்றும் கேமரா ஆபரேட்டர் பணிகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டேட்டா என்ட்ரி பணிக்கு 7,500 ரூபாய்; கேமரா ஆபரேட்டருக்கு 8,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளத்தை மாதம் தோறும் ஒப்பந்த நிறுவனம் வழங்குகிறது. அதற்கான தொகையை அந்நிறுவனத்துக்கு பதிவுத் துறை ஒப்பந்தப்படி வழங்க வேண்டும். இவர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதை நம்பி வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்கள் கூறியதாவது:
சம்பளம் கேட்டால், ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் தாமதமாகிறது; அரசிடமிருந்து தொகை விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அழுத்தம் கொடுத்தால், 'வேலை வேண்டுமானால் தொடரலாம்; வேண்டாம் என்றால் வெளியேறலாம்' என்ற ரீதியில் பேசுகின்றனர். ஒன்பது மாத சம்பளம் வாங்காமல் தொடர்ந்து பணியாற்றுவதா; இல்லை... வெளியேறுவதா என்ற குழப்பத்தில் உள்ளோம். இப்பிரச்னையை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு சில ஊர்களில், சார் பதிவாளர்கள் தங்கள் சொந்தப் பணத்தை தீபாவளிக்கு கொடுத்தனர்.
இந்த நெருக்கடியான நிலையில் நாங்கள் அனைவரும் வெளியேறினால், ஒட்டு மொத்த பதிவுதுறை பணிகளும் முற்றிலும் முடங்கி விடும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

