ADDED : ஏப் 25, 2026 08:04 PM
திருப்பூர்:சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் சில முக்கிய தளர்வுகளை வழங்கியுள்ளதால், திருப்பூரை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 16-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தன. முறையான ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது, வர்த்தகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படைகளைக் கலைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பணப் பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து மீதான கெடுபிடிகள் தளர்ந்துள்ளன. குறிப்பாக, மாநிலத்தின் இரண்டாவது பெரிய காய்கறி சந்தையான தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் கோவில்வழி கால்நடை சந்தை ஆகியவற்றுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு 280 டன் வரை காய்கறிகள் விற்பனையாவதும், கால்நடை சந்தையில் ஒரு மாட்டின் விலை 80 ஆயிரம் ரூபாய் வரை தீர்மானிக்கப்படுவதும் வழக்கம். இத்தகைய சந்தைகளில் வர்த்தகம் பெரும்பாலும் 'வாய்ப்பேச்சின்' அடிப்படையிலேயே முடிவாகிறது. கைமேல் காசு கொடுத்துப் பொருட்களை வாங்கும் சூழலில், பில்கள் அல்லது முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. இதனால், கடந்த சில வாரங்களாக வியாபாரிகள் கொண்டு சென்ற பணம் சோதனையில் சிக்கி, அதற்கான விளக்கங்களை அளித்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்குள் பெரும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியிருந்தது.
தற்போது பறக்கும் படைகள் கலைக்கப்பட்டு, சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சந்தைகளுக்கு வரும் வியாபாரிகள் தடையின்றி பணத்தைக் கொண்டு செல்ல முடிவதாகத் தெரிவித்துள்ளனர். அப்பாடா... இனி பயமின்றி தொழில் செய்யலாம் என்ற நிம்மதிப் பெருமூச்சுடன், வழக்கமான உற்சாகத்துடன் திருப்பூர் வர்த்தக மையங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
