/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க; சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தல்
/
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க; சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தல்
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க; சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தல்
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க; சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தல்
ADDED : மார் 30, 2025 10:46 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி கிராம ஊராட்சிகளில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க, அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகியுள்ளது.
உடுமலை, ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. நகராட்சியில், 40 மைக்ரான் குறைவாக உள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை மற்றும் டம்ளர்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டை கட்டுப்படுத்த, அவ்வப்போது குடோன்கள், உணவு கடைகள், மற்றும் வணிக வளாகங்களில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்துகின்றனர். கிராம ஊராட்சிகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை.
இதனால் கிராமங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நகரங்களில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்க முடியாதவர்கள், கிராமத்தில் உள்ள வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு வழங்கி விடுகின்றனர். இதனால், பல இடங்களிலும், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது.
குறிப்பாக, கிராமத்தில் உள்ள 'டாஸ்மாக்', கடைகளில் தடைசெய்யப்பட்ட டம்ளர்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்திவிட்டு, திறந்தவெளியில் வீசிச் செல்கின்றனர்.
விளைநிலங்களிலும், நீர் நிலைகளிலும் இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் தேங்குகின்றன. இதனால், மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் தற்போது பிளாஸ்டிக் கழிவுகளை அதிகம் உண்ணுகின்றன. இதனால் அவற்றின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது.
குப்பையை மக்கும், மக்காது என தரம் பிரிப்பதும், பல கிராமங்களில் பெயரளவில் மட்டுமே உள்ளது.
குடியிருப்புகளில், திறந்த வெளியில் கொட்டப்படும் கழிவுகள், சாக்கடை கால்வாயில் தேங்கி, கழிவுநீர் வெளியேற முடியாமல் செய்கின்றன. இப்பிரச்னைகள் ஒவ்வொரு பகுதியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் பாதிப்புகளும் பெரிதளவில் உருவாகிறது.
ஒன்றிய அதிகாரிகள் கிராம ஊராட்சிகளிலும், பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.