/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த சிக்கலோ சிக்கல்! நிதி ஒதுக்கீடு இன்றி தவிக்கும் உள்ளாட்சிகள்
/
கிராமங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த சிக்கலோ சிக்கல்! நிதி ஒதுக்கீடு இன்றி தவிக்கும் உள்ளாட்சிகள்
கிராமங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த சிக்கலோ சிக்கல்! நிதி ஒதுக்கீடு இன்றி தவிக்கும் உள்ளாட்சிகள்
கிராமங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த சிக்கலோ சிக்கல்! நிதி ஒதுக்கீடு இன்றி தவிக்கும் உள்ளாட்சிகள்
ADDED : டிச 12, 2024 11:20 PM

உடுமலை; கிராமப்புறங்களில், தெருநாய்களை கட்டுப்படுத்த, கால்நடைத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. தேவையான நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளில் இல்லாததால், திட்டத்தை செயல்படுத்துவது கேள்விக்குறியாக உள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கால்நடைகளை மர்ம விலங்குகள் இரவு நேரங்களில் தாக்குவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக, நுாற்றுக்கணக்கான ஆடுகள் இதுவரை உயிரிழந்து கால்நடை வளர்ப்போர் பாதித்துள்ளனர். இப்பிரச்னை நிலவிய பகுதிகளில், கேமரா வைத்து கண்காணிப்பு செய்தனர். இதில், சில இடங்களில், தெருநாய்கள் கூட்டமாக சென்று கால்நடைகளை தாக்குவது கண்டறியப்பட்டது. மேலும், இரவு நேரங்களில், மக்களையும் நாய்கள் துரத்தி கடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியது.
அனைத்து கிராமங்களிலும், தெருநாய்களால் பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையானது. இதையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
குறை தீர் கூட்டங்களிலும் விவசாயிகள் தரப்பில், பல்வேறு மனுக்கள் கொடுத்தனர். நகர்ப்புறங்களில், மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் வாயிலாக, தெருநாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்தும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர், தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். இதே நடைமுறையை கிராம உள்ளாட்சிகளிலும் செயல்படுத்த அரசை தன்னார்வலர்கள் வலியுறுத்தினர்.
அரசு வழிகாட்டுதல்
இதையடுத்து, கிராமங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், கருத்தடை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, கால்நடைத்துறைக்கு அரசு சமீபத்தில் வழிகாட்டுதல் வழங்கியது.
கருத்தடைக்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவை வாங்க கால்நடைத்துறைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே அத்துறையினர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் இந்த நிதியை ஒதுக்கீடு செய்தால், திட்டத்தை துவக்கலாம் என கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதன்படி, ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய, சராசரியாக 1,300 ரூபாய் வரை தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு பணிகள் பாதித்துள்ள நிலையில், கால்நடைத்துறையினர் கருத்துரு அடிப்படையில், நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஒன்றிய குழு கூட்டங்களிலும் தகவல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய பொது நிதியில் நிதி ஒதுக்கீடு செய்ய, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
ஆனால், ஒன்றிய குழு உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிய உள்ள தருணத்தில், ஒன்றிய பொது நிதியில் இருந்து பெரும் பகுதியை தெருநாய்களை கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்தால், பல்வேறு பணிகள் பாதிக்கும் என எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
நீண்ட இழுபறிக்குப்பிறகு, கிராமங்களில், தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள அரசு, திட்டத்துக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதனால், நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தெருநாய்களை கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு, அரசு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, தன்னார்வலர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பி வருகின்றனர்.

