ADDED : மார் 14, 2026 06:10 AM
திருப்பூர்: திருப்பூரில் வீடுகளுக்கான சமையல் காஸ் சிலிண்டர் 'புக்கிங்' செய்ய முடியாமல் நுகர்வோர் திண்டாடுகின்றனர்; காஸ் வினியோக நிறுவனங் களிலும் 'புக்கிங்' செய்யப் படுவதில்லை என்ற புகார் அதிகரித்து வருகிறது.
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில், சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சமீப நாட்களாக, சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக, 'இண்டேன்' காஸ் பதிவு முடங்கியிருக்கிறது எனவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
காஸ் சிலிண்டர் 'புக்கிங்' செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பிரத்யேக மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது; மிஸ்டு கால், மெசேஜ் மற்றும் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக சிலிண்டர் 'புக்கிங்' செய்து கொள்ளும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'எந்த முறையிலும், 'புக்கிங்' செய்ய முடிவதில்லை' என நுகர்வோர் தெரிவிக்கின்றனர். காஸ் வினியோக அலுவலகங்களுக்கு சென்று 'புக்கிங்' செய்தாலும், சில இடங்களில் வினியோகஸ்தர்கள் அதை ஏற்பதில்லை எனவும் கூறுகின்றனர்.
இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால், ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள், மொபைல் போன் உள்ளிட்ட 'டிஜிட்டல்' முறையில் 'புக்கிங்' செய்கின்றனர். இதனால், சில நேரங்களில் 'சர்வர்' முடங்கும். ஆனால், இயல்பான 'புக்கிங்' மற்றும் நிர்ணயிக்கப்பட்ட சீரான இடைவெளியில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. காஸ் வினியோக நிறுவனங்களுக்கு நேரடியாக சென்றும் 'புக்கிங்' செய்யலாம். 'புக்கிங்' செய்ய முடியாது என யாரும் சொல்ல மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
