ADDED : நவ 14, 2024 11:27 PM

திருப்பூர் ; திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், 71வது கூட்டுறவு வார விழா நேற்று துவங்கியது; வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருப்பூர் - பல்லடம் ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பழனிசாமி, கூட்டுறவு கொடியேற்றி துவக்கி வைத்தார். கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் தமிழ்ச்செல்வன், சரவணகுமார், உதயகுமார், தேவி (பொது வினியோக திட்டம்) உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 238 கூட்டுறவு சங்கங்களிலும், கொடியேற்றப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.
இரண்டாவது நாளான இன்று, சேமலை கவுண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. வரும் 16ம் தேதி, அலகுமலை ஸ்ரீ வேலவன் மஹாலில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசு கோப்பை மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.
வரும், 17ம் தேதி, காங்கயம் ரோட்டிலுள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவு பொருட்கள் விற்பனை மேளா நடைபெறுகிறது. 18ம் தேதி, குமரன் மகளிர் கல்லுாரியில், கூட்டுறவு சங்க உறுப்பினர் சந்திப்பு முகாம் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் சேமிப்பு கணக்கு துவங்கும் முகாம் நடைபெறுகிறது. 19ம் தேதி, உடுமலை கூட்டுறவு சங்க வளாகத்தில், இலவச கண் பரிசோதனை முகாமும், 17ம் தேதி, திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் ரத்த தான முகாமும் நடைபெறுகிறது.