/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
/
இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
ADDED : மார் 13, 2026 05:58 AM

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடக்கும் கொப்பரை ஏலத்திற்கு, வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ.154.99க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 32 விவசாயிகள், 283 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.137 முதல், ரூ.154.99 வரையும், இரண்டாம் தரம், ரூ.100.99 முதல், ரூ. 130.82 வரையும், இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
கடந்த சில வாரங்களை ஒப்பிடும் போது, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, கொப்பரை வரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது.
இத்திட்டத்தில், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதனால், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரித்து வருகிறது.
விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.

