/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல கூட்டத்தில் குறைகளை அடுக்கிய கவுன்சிலர்கள்
/
மண்டல கூட்டத்தில் குறைகளை அடுக்கிய கவுன்சிலர்கள்
ADDED : பிப் 08, 2025 06:37 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல கூட்டம், தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் முருகேசன், உதவி செயற் பொறியாளர் ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
ராஜேந்திரன் (இ.கம்யூ.,): வீட்டு இணைப்புகளில் குடிநீர் குறைவாக வருகிறது. முறையிட்டால் நடவடிக்கை இல்லை.
தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.,): குடிநீர் இணைப்புக்காக ரோடு தொடர்ந்து தோண்டப்படுவதும், மூடப்படுவதுமாக உள்ளது. முறையற்ற பணியால் விபத்து ஏற்படுகிறது. வீதிகளில் புதிய மின் விளக்கு எப்போது பொருத்தப்படும்?
இந்திராணி (அ.தி.மு.க.,): நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. மக்கள் நடமாட முடிவதில்லை.
லோகநாயகி (தி.மு.க): குடிநீர் சீராக வழங்க வேண்டும். 10 நாய்களை பிடித்து சென்றனர். இப்போது, 20 நாய்கள் திரிகிறது. ஏ.டி., காலனியில் கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
முத்துசாமி (அ.தி.மு.க.,): பூலுவபட்டியில் இருந்து நெருப்பெரிச்சல் வரை உள்ள ரோட்டோர கடைகள் மாநகராட்சிக்கு குப்பை வரி உள்பட எந்த வரியும் செலுத்துவதில்லை. தினசரி குப்பை எடுக்க ஆட்டோ செல்கிறது. வரி செலுத்தும் வீடுகளுக்கு குப்பை எடுக்க ஆட்டோ வருவதில்லை.
கவிதா (அ.தி.மு.க.,): அவிநாசி நகரில் பால்வாடி மையம் கட்ட வேண்டும். தற்போது உள்ள இடத்திற்கு வாடகை கொடுக்க சிரமமாக உள்ளதாக கூறுகின்றனர். குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறையே வருகிறது.
கோபால்சாமி (தி.மு.க.,): மூன்று ஆட்டோ வர வேண்டியதில் இரண்டு தான் வருகிறது. குப்பை எடுக்க முடியவில்லை. தேக்கமாகிறது.
லதா (தி.மு.க.,): இரண்டு ஆண்டு கட்டாததற்கு துண்டிக்கின்றனர்; பல ஆண்டு கட்டாதவர்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை. ஆக்கிரமிப்பு குறித்து நாங்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆன்லைனில் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. பிரச்னைகளை காது கொடுத்து கேட்பதில்லை. ரோடு போடுவது குறித்து கூட எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.