திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சம்பத்குமார், 30. இவர் நீலகிரி மாவட்டம் சோலூரில் உள்ள உரக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்தார். இவரது தாய் மற்றும் தந்தை இறந்துவிட்ட நிலையில், சித்தப்பா சின்னசாமி, 58, பராமரிப்பில் சம்பத்குமார் இருந்துள்ளார்.
தனக்கு தாய், தந்தை இல்லாததால் உறவினர்கள் யாரும் பெண் கொடுக்கவில்லை. 30 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என சம்பத்குமார் தனது நண்பர்களிடம் புலம்பியுள்ளார். மன விரக்தியில் சம்பத்குமார் இருந்துள்ளார்.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்த சம்பத்குமார் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சம்பத்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
----டயர்கள் திருட்டு;வாலிபர் கைது
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகரன், 47. லாரி உரிமையாளர். இவருடைய, 90 சக்கரங்கள் கொண்ட லாரி, கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு லோடு ஏற்ற வந்தபோது, பழுதாகியது. உதிரி பாகங்கள் கிடைக்காததால், கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள, லாரி பேட்டையில் கடந்த ஒரு வருடமாக டிரெய்லர் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, டயர்களை கழற்றி கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்து கருமத்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரவணக் குமார், 24, கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் தங்கியிருந்து, நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்துள்ளார். பஞ்சர் போடுவது போல் நடித்து, டிரெய்லரில் இருந்து நான்கு டயர்களை திருடி விற்றது தெரிய வந்தது. இவர் மேலும் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. நான்கு டயர்களை மீட்டு, சரவணக்குமாரை போலீசார் கைது செய்தனர்.