/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!
/
ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!
ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!
ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!
ADDED : பிப் 10, 2024 11:04 PM

திருப்பூரில் நுால் கமிஷன் வர்த்தகர் மற்றும் அவரது நண்பர்களிடம், இரு மடங்கு பணம் தருவதாக ஒரு கும்பல் உறுதியளித்தது. இதை நம்பி, அலுவலகத்தில் 1.69 கோடி ரூபாயை ரொக்கமாக நுால் கமிஷன் வர்த்தகர் திரட்டி வைத்திருந்தார்.
இரு மடங்கு பணம் தருவதாக உறுதியளித்த கும்பலை சேர்ந்தவர்களே அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி, 'ஹவாலா' பணம் புழங்குவதாக மிரட்டி, பணத்தை பறித்து சென்றனர்.
போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில் நான்கு தனிப்படையினர் விசாரணை நடத்தி எட்டு பேர் கும்பலை கைது செய்து, 96 லட்சம் ரூபாய், மூன்று சொகுசு கார்களைப் பறிமுதல் செய்தனர்.
பேராசை காரணம்
திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் கூறியதாவது:
மோசடி கும்பல் வந்த கார், சுங்கச்சாவடிகளில் கிடைத்த தகவலின் படி, கோவையில் இருப்பது தெரிந்தது. வாகன எண்ணின் உரிமையாளர் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டன. கேரளா, கோவை, பெங்களூர், சென்னை, நான்கைந்து பேரிடம் விற்பனைக்கு கை மாறியது தெரிந்தது.
'பாஸ்ட்டேக்'க்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் எண் குறித்து விசாரித்த போது அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அந்த மொபைல் எண்ணுக்கு உரியவர், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்தது தெரிந்தது. கேரளாவுக்கு சென்று இறந்தவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடந்தது. அந்த நபர் இறந்த பின், அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியேறி சென்று, வேறு ஒருவருடன் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
விசாரணையில், பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்த கோவையை சேர்ந்த நபரின் விபரம் தெரிந்தது.
பறித்த பணம் மூலம், கோவையில், இரண்டு புதிய கார்களை வாங்கினர். இரு கார்களும், கேரளாவில் இருந்தன. பின், அங்கிருந்து, ஒரு கார் மூலம் சிலர் பெங்களூருக்கு தப்பி செல்வது தெரிந்தது.
நான்கு தனிப்படைகளை, கேரளா, சென்னை, பெங்களூர், புதுச்சேரி, கோவை, சேலம் என போன்ற பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி, அதிரடி நடவடிக்கைகளுக்கு பின், குற்றவாளிகள் சிக்கினர். பேராசைதான் குற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.
ஆறு மாத ஒத்திகை
மோசடிக்கும்பல் கடந்த, ஆறு மாதமாக இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டனர். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால், போலீசார் எதையெல்லாம் பின்பற்றி விசாரித்து பிடிப்பார்கள் என, ஒவ்வொரு விஷயமாக அலசி ஆராய்ந்து திட்டம் தீட்டினர். போலீசிடம் சிக்காத வகையில், வேறு நபரின் பெயரில் உள்ள மொபைல் எண்ணை பயன்படுத்தியது. 'வாட்ஸ்அப்' காலில் தொடர்பு கொள்வது என தொழில்நுட்பரீதியாக திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர்.
முக்கிய குற்றவாளியை ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என நம்ப வைத்துள்ளனர். அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட நான்கைந்து மொழிகளை நன்கறிந்தவர். மூளையாக செயல்பட்ட, மூவர் மீது ஏற்கனவே சில மோசடி வழக்கு உள்ளது. இதில் ஒருவர் மீது சி.பி.ஐ., அதிகாரியாக நடித்து மோசடி செய்த வழக்கு ஒன்றும் உள்ளது.
பணத்தை எடுத்து கொண்டு கேரளா, புதுச்சேரி, சென்னை, கோவை, பெங்களூர் என, பல இடங்களுக்கு பிரிந்து சென்றனர். புதிய கார், மொபைல் போன் என, அனைத்தும் ரொக்க பணத்தில் வாங்கினர். ஒரே நாளில் வாங்கினர். அதுதவிர பெரிய ஓட்டல்களில் அறை எடுத்து 'ஹாயாக' பணத்தை செலவு செய்து பொழுதை கழித்தனர்.
எட்டு பேரில் சென்னையை சேர்ந்த ஒருவர் மட்டும், 40 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். அந்த பணம் மூலம், தனது கடனை அடைத்தது மட்டுமல்லாமல், ஒரு தொகையை ரஷ்யாவில் மருத்துவ படித்துவரும் மகனின் படிப்பு செலவுக்காக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
சவாலில் வென்ற போலீஸ்
ஏழு நாட்களில் குற்றவாளிகளை பிடித்து பெரும்பகுதி பணத்தை மாநகர தனிப்படை போலீசார் மீட்டனர். ஆரம்பத்தில், கும்பல் கையாண் டுள்ள சில தொழில்நுட்பரீதியான விஷயங்களால், தடயங்கள் எதுவும் கிடைக்காமல், பெரிய சவாலாக இருந்தது. அதை முறியடிக்கும் வகையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, குழுக்களாக பிரிந்து சிறப்பாக செயல்பட்டு அந்த கும்பலை கொத்தாக பிடித்து பணத்தை மீட்டது. போலீசாரிடம் சிக்கிய குற்றவாளிகள், 'எங்களை யாருமே பிடிக்கல, எப்படி சார் நீங்க கண்டுபிடிச்சீங்க' என்று வியப்புடன் கேட்டார்களாம்.