/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதலைப்பண்ணை மேம்படுத்த திட்டம்
/
முதலைப்பண்ணை மேம்படுத்த திட்டம்
ADDED : ஆக 22, 2025 11:59 PM

தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூரில், பொதுமக்களுக்கு சினிமா மட்டுமே, ஒரே பொழுதுபோக்கு; அதுவும் தொடர்ச்சியாக செல்ல முடியாது என்ற நிலையில், சுற்றுலா சார்ந்த பொழுது போக்குகளை தேடி செல்கின்றனர்.
உள்ளூரிலேயே அதற்கான தேவையை பூர்த்தி செய்ய முனைப்புக்காட்டி வருகிறது, மாவட்ட சுற்றுலாத்துறை. அதன்படி, ஆண்டிபாளையம் குளத்தில், சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி நடக்கிறது. தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கி உடுமலை, அமராவதி உள்ளிட்ட இடங்கள், இயற்கையாகவே சுற்றுலா தலமாக அமைந்திருக்கிறது. அப்பகுதியில் சுற்றுலா மேம்பாடு சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறது, மாவட்ட சுற்றுலாத்துறை.
வனத்துறை பராமரிப்பில் உள்ள உடுமலை அடுத்த அமராவதி முதலைப்பண்ணை, 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 80க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கும் நுழைவுக்கட்டணம், வனத்துறைக்கு வருவாய் ஈட்டி தருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், புல் தரை, நடைபாதை ஏற்படுத்தப்பட்டது. முயல், கொக்கு, மயில், இருவாச்சி பறவை, யானை, புலி, சிறுத்தை, ஒட்டக சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளின் சிலைகள், தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அமராவதி முதலை பண்ணையை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், வனத்துறை அலுவலர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா ஆர்வலர்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா, கழிப்பறை மற்றும் தோட்டம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.அங்கு வந்த சுற்றுலா பயணிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர்.