/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளத்திற்கு பயிர்க்காப்பீடு தொகை குறைவு; உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்
/
மக்காச்சோளத்திற்கு பயிர்க்காப்பீடு தொகை குறைவு; உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்
மக்காச்சோளத்திற்கு பயிர்க்காப்பீடு தொகை குறைவு; உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்
மக்காச்சோளத்திற்கு பயிர்க்காப்பீடு தொகை குறைவு; உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 15, 2025 11:14 PM
உடுமலை: மக்காச்சோளம் சாகுபடி செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பயிர்க்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. காரீப், ராபி பருவங்களில், சராசரியாக, 60 ஆயிரம்ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மக்காச்சோளத்தில், பருவம் தவறிய மழை, வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் நோய்த்தாக்குதல், படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், பயிர் சேதம் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிப்பதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன், நிர்ணயிக்கப்பட்ட பயிர் காப்பீடு தொகை காரணமாக, பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை.
மக்காச்சோளம் சாகுபடிக்கு, உழவு, விதை, உரம், இடு பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் என, ஏக்கருக்கு, 65 ஆயிரம் ரூபாய் வரை தற்போது செலவாகி வருகிறது.
ஆனால், அரசு இச்சாகுபடிக்கு செலவினமாக, ஏக்கருக்கு, 33 ஆயிரத்து 668 ரூபாய் என நிர்ணயித்து, காப்பீடு செய்து வருகிறது. இதில், அரசு பங்களிப்பு, ரூ. 4,815 ஆகவும், விவசாயிகள், ரூ.535 என ஏக்கருக்கு, 5,350 ரூபாய் பிரீமியம் செலுத்தப்படுகிறது.
பயிர்க்காப்பீடு செய்த பயிர்கள் சேதம் அடைந்தால், அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, இழப்பீடு தொகை வழங்கும் போது, இத்தொகையிலும் பெருமளவு குறைந்து, சொற்ப அளவிலான தொகை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
எனவே, வேளாண் துறை, புள்ளியியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு, தற்போது பயிர் சாகுபடிக்கு ஏற்படும் செலவு அடிப்படையில், காப்பீடு தொகை நிர்ணயிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, கூட்டுறவு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், மக்காச்சோளம் பயிர் காப்பீட்டில் பல ஆண்டுகளாக ஒரே தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, மக்காச்சோளம் விதை, உரம், மருந்து, ஆட்கள் கூலி, டிராக்டர் உழவு என சாகுபடி செலவினம் கடுமையாக உயர்ந்துள்ளது.
குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்காமல் உள்ளதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
காப்பீடு தொகை அதிகரிக்காமல், குறைந்தளவு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பயிர் சேதம் ஏற்பட்டாலும் குறைந்தளவே இழப்பீடு கிடைக்கிறது.
எனவே, ராபி பருவத்தில், வேளாண் துறை, புள்ளியல் துறை ஆய்வு அடிப்படையில், உடனடியாக வரும் ராபி பருவத்திலேயே காப்பீடு தொகையை ஏக்கருக்கு, 65 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
அதற்கான, பிரீமியம் தொகையை உயர்த்தினாலும், விவசாயிகள் செலுத்த தயாராக உள்ளனர். இது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர், மாநில வேளாண் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.