ADDED : பிப் 17, 2024 01:29 AM
அவிநாசி:அவிநாசி ஒன்றியம், போத்தம்பாளையம் ஊராட்சியில், இ -சேவை மையம் மற்றும் கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருபவர் கருப்பசாமி, 26.
முன்னதாக அதே பகுதியில் போத்தம்பாளையம் புளி காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், 38, என்பவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு கருப்பசாமி வேலை பார்த்துவந்தார். கடந்த 4 மாதம் முன்பு தனியாக பிரிந்து வந்த கருப்பசாமி 'இ -சேவை மையம்' புதிதாக துவங்கி நடத்தி வந்துள்ளார்.
இதனால், ராஜேஷ்குமார் - கருப்பசாமி இடையே தொழில் போட்டி இருந்தது.
ராஜேஷ்குமார், தனது உறவினர் போத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் ஆனந்தராஜ், 24, மற்றும் அவரது நண்பர்களுடன் கருப்பசாமியை தாக்க திட்டம் தீட்டியுள்ளார். கடந்த 14ம் தேதி இரவு கருப்பசாமி கம்ப்யூட்டர் சென்டரிலிருந்து வீட்டிற்கு செல்லும் போது, டூவீலரில் வந்த இருவர் காட்டுப்பகுதியில் வைத்து அவரை வழிமறித்து முகவரி கேட்பது போல் மடக்கி உள்ளனர். மொபைல் போனை பறிக்க முயன்றுள்ளனர்.
தர மறுக்கவே, கத்தியால் கருப்பசாமியின் கையில் வெட்டி, மொபைல்போனை பறித்து தப்பி சென்றனர். கருப்பசாமியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எஸ்.பி., அபிஷேக் குப்தா கண்காணிப்பில், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமாரின் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் சந்திரசேகர், அமல் ஆரோக்கியதாஸ், சர்வேஸ்வரன் அடங்கிய மூன்று தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
அதில் ராஜேஷ்குமார், அவரது உறவினர் ஆனந்தராஜ், பிரவீன், 24, சஞ்சய், 21, ஆதவன் பாண்டி, 20 என ஐந்து பேரை கைது செய்தனர்.