/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினசரி குடிநீர் வினியோகம் இன்னும்... கனவு! 4வது திட்டம் முழு செயல்பாடு எப்போது?
/
தினசரி குடிநீர் வினியோகம் இன்னும்... கனவு! 4வது திட்டம் முழு செயல்பாடு எப்போது?
தினசரி குடிநீர் வினியோகம் இன்னும்... கனவு! 4வது திட்டம் முழு செயல்பாடு எப்போது?
தினசரி குடிநீர் வினியோகம் இன்னும்... கனவு! 4வது திட்டம் முழு செயல்பாடு எப்போது?
ADDED : பிப் 22, 2026 06:25 AM

திருப்பூர்: திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதை, சட்டசபை தேர்தலுக்கான நேர்மறை விஷயமாக தி.மு.க.வினர் கணக்கு போடுகின்றனர். ஆனால், வாக்குறுதி அளிக்கப்பட்டபடி, தினசரி குடிநீர் வினியோகம் என்ற அறிவிப்பு இன்னும் முழுமையாகச் செயல்பாட்டு வராமல், வெறும் கனவாகவே நீடிக்கிறது.
திருப்பூர் மாநகராட்சியில் 'அம்ரூத்' திட்டத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதிகரித்த குடிநீர் தேவை, நகரின் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து, தினமும் 23 கோடி லிட்டர் குடிநீர் பெற்று வழங்கும் வகையில் திட்டமிட்டு பணி துவங்கியது. இதற்காக மாநகராட்சி பகுதியில் 68 இடங்களில் மேல்நிலை மற்றும் தரைமட்டத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 66 தொட்டிகள் முழு அளவில் பணி முடிந்து தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆறு தொட்டிகளில் குழாய் இணைப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
மேட்டுப்பாளையம் ஆற்றில், தடுப்பணை ஏற்படுத்தி, அதிலிருந்து உறிஞ்சு கிணறுகள் மூலம் நீர் எடுத்து, 20 கி.மீ. கடந்து அன்னுார் அருகேயுள்ள சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்து, திருப்பூர் கொண்டு வரப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏறத்தாழ 150 கி.மீ., நீளத்துக்கு அமைந்துள்ள குழாய்கள் வழியாக தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு, 1,100 கி.மீ. நீளமுள்ள வினியோக குழாய்கள் வாயிலாக வினியோகிக்கப்படுகிறது.
எப்போது முடியும்?
இதில், ஏறத்தாழ 1.2 லட்சம் குழாய் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தினமும் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கவும், நான்கு வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கவும் திட்டமிட்டு அதற்கேற்ப பணிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஜன., மாதம் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், பிரதான குழாய் பதித்தல், மேல்நிலைத்தொட்டிகள் கட்டுமானம், வினியோக குழாய் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குவது ஆகியவற்றில் நிலவிய பல்வேறு தடைகள் காரணமாக ஓராண்டு கடந்தும் பணிகள், 10 சதவீதம் என்ற அளவில் முடிக்கப்படாமல் உள்ளது.
எவை தடை?
கடந்த பல ஆண்டுகளாக திருப்பூரில் நிலவிய குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இத்திட்டம் அமைந்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது.வரும் இத்திட்டத்தில் தொடரும் குளறுபடி, தாமதம், உடைப்புகள், அதை சரி செய்வதில் நிலவும் தாமதம் ஆகியன திட்டம் முழுமையாக நிறைவடைவதில் பெரும் தடையாக உள்ளது. முழு செயல்பாட்டுக்கு வரும்போதுதான், முதலில் இருந்து ஆளும்கட்சியினர் அளித்துவந்த தினசரி குடிநீர் என்ற வாக்குறுதி நிறைவு பெறும். ஆனால், தற்போது வரை அது கனவாகவே தொடர்கிறது.
---
நான்காவது குடிநீர் திட்டச் செயல்பாட்டுக்காக, திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி.

