ADDED : ஜன 24, 2026 04:37 AM

பல்லடம்: பல்லடத்தில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பஞ்சர் போடப்பட்ட இடத்தில் மீண்டும் ஓட்டை விழுந்துள்ளது. நெடுஞ்சாலை, தொடர்ந்து தோண்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இன்றைய வாகனங்கள் பெருக்கத்துக்கு ஏற்ப ரோடு வசதி அவசியம். இருவழிச் சாலைகள் நான்கு வழியாகவும், பின், ஆறு வழிச்சாலைகளாகவும் காலத்துக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
இவ்வாறு, பல கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படும் சாலைகள், அடிக்கடி தோண்டப்படுவதால், ரோடு சேதமடைந்ததுடன், மக்களின் வரிப்பணமும் வீணாகிறது. இவ்வாறு, பல்லடம் -பொள்ளாச்சி ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
மோசமாக இருந்த இந்த ரோடு, கடந்த சில ஆண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, இந்த ரோடு, அடிக்கடி தோண்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையம் பகுதியில், மூன்று இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் தான் அவை பஞ்சர் போடப்பட்டன. வடுகபாளையம் அரசு பள்ளிக்கு எதிரே, ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்ட இடத்தில், மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி வருகிறது.
ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதியில் ஏற்பட்ட குழியையே, நெடுஞ்சாலைத் துறையினர் சரிவர சீரமைக்கவில்லை.
தற்போது, அந்த குழியை ஒட்டியுள்ள மற்றொரு இடத்தில் தண்ணீர் வெளியேறி வருகிறது இப்படியே குழாய் உடைப்பு ஏற்படுவதும், ரோட்டை தோண்டுவதும், பொள்ளாச்சி ரோட்டில் வாடிக்கையாகி வருகிறது.
இது வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
