/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணுகுசாலையில் 'எஸ்' வளைவால் அபாயம்! ஆய்வுக்கு பிறகும் அலட்சியம்
/
அணுகுசாலையில் 'எஸ்' வளைவால் அபாயம்! ஆய்வுக்கு பிறகும் அலட்சியம்
அணுகுசாலையில் 'எஸ்' வளைவால் அபாயம்! ஆய்வுக்கு பிறகும் அலட்சியம்
அணுகுசாலையில் 'எஸ்' வளைவால் அபாயம்! ஆய்வுக்கு பிறகும் அலட்சியம்
ADDED : ஜூன் 16, 2025 09:18 PM

உடுமலை; உடுமலை அருகே நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை திட்ட வடிவமைப்பு குளறுபடியால், சந்திப்பு பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது; அதிகாரிகள் ஆய்வு செய்து ஓராண்டு ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த, 2018ல், துவங்கி இதுவரை நிறைவு பெறாமல் உள்ளது. இதனால், போக்குவரத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, பாலப்பம்பட்டி அருகே, பழைய தேசிய நெடுஞ்சாலையுடன், நான்கு வழிச்சாலை அணுகுசாலை சந்திக்கும் சந்திப்பு பகுதி உள்ளது.
அப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், அணுகுசாலையில் ஏறி, 'எஸ்' வளைவு போல திரும்பி மீண்டும் அவ்வழியாக செல்ல வேண்டும்.
அதே வேளையில், பழநியில் இருந்து வரும் வாகனங்கள், அணுகுசாலையில், ஒரே புறத்தில் மட்டுமே பயணிக்க முடியும். இந்த வளைவு பகுதி மேடாகவும், கனரக வாகனங்கள் திரும்ப முடியாத அளவுக்கும் அமைந்துள்ளது.
இந்த குளறுபடியால், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பிரதான ரோட்டில் நிலவும் குளறுபடிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
அப்பகுதியில் ஏற்பட்ட தொடர் விபத்துகளையடுத்து, கடந்த, ஆக., 2024ல், 'நகாய்' திட்ட அதிகாரிகள், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
பாலம் அமைத்தல், ரவுண்டானா ஏற்படுத்துதல் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தி, நான்கு வழிச்சாலையின் அணுகுசாலை பகுதியில் நிலவும் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பிரதான ரோட்டில், தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டும், அலட்சியம் காட்டப்படுவது மக்களை வேதனையடைய செய்துள்ளது.