/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனக்கிராமத்தில் ஆபத்தான பள்ளி கட்டடம்; கேள்விக்குறி யானது குழந்தைகள் கல்வி
/
வனக்கிராமத்தில் ஆபத்தான பள்ளி கட்டடம்; கேள்விக்குறி யானது குழந்தைகள் கல்வி
வனக்கிராமத்தில் ஆபத்தான பள்ளி கட்டடம்; கேள்விக்குறி யானது குழந்தைகள் கல்வி
வனக்கிராமத்தில் ஆபத்தான பள்ளி கட்டடம்; கேள்விக்குறி யானது குழந்தைகள் கல்வி
ADDED : ஜன 15, 2025 12:47 AM

உடுமலை; உடுமலை அருகே, குழிப்பட்டி வனக்கிராமத்தில், அரசுப்பள்ளி கட்டடம், புதுப்பிக்கப்படாமல், தற்காலிக கட்டடத்தில் வகுப்பறை செயல்படுகிறது; இதனால், பழங்குடியின குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட கிராமம் குழிப்பட்டி. அடர்ந்த வனப்பகுதியிலுள்ள கிராமத்தை சேர்ந்த பழங்குடியின குழந்தைகளின் கல்விக்கு, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியே ஆதாரமாகும்.
இரு வகுப்பறையுடன் கூடிய கட்டடத்தில் செயல்பட்ட பள்ளியில், 32 குழந்தைகள் படித்து வந்தனர். பள்ளி கட்டடம் போதிய பராமரிப்பில்லாமல் இடியும் நிலைக்கு மாறியது.
இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, வால்பாறை மற்றும் இதர உண்டு உறைவிட பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்த்தனர். இதனால், குழிப்பட்டி பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது.
அரசுப்பள்ளி கட்டடத்தை புதுப்பித்து, தேவையான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட எந்த துறையினரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது, தற்காலிக கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: வனப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் கல்வி பெற போராட வேண்டியுள்ளது. குழிப்பட்டி அரசுப்பள்ளி கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது குறித்து, பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சமீபத்தில், திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள், எங்கள் கிராமத்தில், நேரடியாக ஆய்வு செய்தனர். விரைவில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.
உடுமலை ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'குழிப்பட்டி வனக்கிராமத்தில் பள்ளி கட்டடத்தை புதுப்பிப்பது குறித்து, திருப்பூர் கலெக்டர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.