/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளின் தடகளக் கனவு; காரை விற்ற தந்தை
/
மகளின் தடகளக் கனவு; காரை விற்ற தந்தை
ADDED : செப் 23, 2024 12:42 AM

மகளின் விளையாட்டு போட்டி, தடகள கனவுக்காக தந்தை காரை விற்றார்.
திருப்பூர், 15 வேலம்பாளையம், கணியாம்பூண்டி சாலை, பாட்டையப்பா நகரில் வசிப்பவர்கள், தேவராஜ் - விமலா தம்பதி. இவர்களது மகள், மெஹிடா எபிபானி. அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். மகன், மெகில்சன் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். மெஹிடா எபிபானியின் தடகள போட்டி ஆர்வம், ஏழாம் வகுப்பில் துவங்கியது.
மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளைக் கடந்து, உ.பி., மாநிலம், லக்னோவில் நடந்த தேசிய தடகள போட்டியில் பங்கேற்று,80 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், இரண்டாமிடம் பெற்று, வெள்ளி வென்று அசத்தினார். இதன் மூலம் அகில இந்திய அளவில், இந்திய வீராங்கனைகளுக்கு (14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு) தடகளத்துக்கென நடத்தப்படும் சிறப்பு பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
தங்கம் வென்று சாதித்தார்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடக்கும் ஒரு மாத பயிற்சிக்கு அனுப்பி வைக்க சிரமப்பட்ட தேவராஜன், மகளின் விருப்பத்தை நிறைவேற்ற காரை விற்று, காசாக்கினார். ஆர்வமுடன் அனுப்பியும் வைத்தார். சிறப்பாக பயிற்சி பெற்று வந்த மெஹிடா, அடுத்தடுத்து சென்னை, திருச்செங்கோட்டில் நடந்த மாநில தடகள போட்டியில், 80 மீ., தடை தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று திறமையை வெளிக்காட்டினர்.
தேவராஜன் கூறுகையில், ''எல்லாமே அவளது பிரியம் தான். நீ விளையாடிட்டு வாம்மா என்று தான் சொல்வேன். பயிற்சிக்கு போகணும்னு பிரியபட்டாள்; காரை விற்று, காசு வாங்கி அனுப்பினேன். தொழில் டிரைவர் தான். இப்ப மளிகை கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். வெளியூர் விளையாட்டு போட்டிகளுக்கு என்றால் கடன் வாங்கியாவது மகளை அனுப்பி வைத்து விடுவேன்'' என்றார்.