/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிச., 1ம் தேதி உலக எய்ட்ஸ் நோய் தினம்
/
டிச., 1ம் தேதி உலக எய்ட்ஸ் நோய் தினம்
ADDED : டிச 01, 2024 01:06 AM
எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிச., 1ம் தேதி உலக எய்ட்ஸ் நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நோயை தடுக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுகிறது; தமிழகத்தில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் செயல்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் தேவையான ஆலோசனை வழங்க அரசு மருத்துவ கல்லுாரி, அனைத்து தாலுகா அரசு மருத்துவமனை உள்ளிட்ட, 21 இடங்களில் நம்பிக்கை மையம் செயல்படுகிறது. இங்கு ரத்தபரிசோதனை மேற்கொள்வதுடன், தேவையான ஆலோசனை பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படுகிறது. சாதாரண ரத்த பரிசோதனை மூலம் ஒருவருக்கு எச்.ஐ.வி., உள்ளதாக இல்லையா என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
பொதுவாக, 16 முதல், 32 வயது பிரிவினருக்கு தான் எச்.ஐ.வி., பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. நம் மாவட்டத்தில், நவ., முதல் வார கணக்கீட்டின் படி, 5,500 எச்.ஐ.வி., வைரஸ் பாதித்தவர்கள் உள்ளனர். இவர்களில், 3,540 க்கும் மேற்பட்டோர் ஏ.ஆர்.டி., மையத்தில் கூட்டுமருந்து பெற்று, சாப்பிட்டு வருகின்றனர். மாநில அளவில் திருப்பூர் ஆறாவது இடத்தில் உள்ளது; இருப்பினும், எய்ட்ஸ் நோயாளிகள் யாருமில்லை.
எச்.ஐ.வி., வேறு...
எய்ட்ஸ் வேறு...
எய்ட்ஸ் நோய் தொடர்பாக கவுன்சிலிங் வழங்குபவர்கள் கூறுகையில்,' பெரும்பாலனோருக்கு எச்.ஐ.வி., தொற்று. எய்ட்ஸ் இரண்டுக்கும் வித்தியாசம் புரிவதில்லை. எச்.ஐ.வி., ஒரு வைரஸ்; அதன் முற்றிய நிலையே எய்ட்ஸ். வைரஸ் பாதித்த நாளில் இருந்தே, கட்டாயம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். எச்.ஐ.வி., பாதித்தவருக்கு உயிரிழப்பு எளிதில் ஏற்படுத்துவதில்லை. அது, எய்ட்ஸ்ஸாக மாறிய பின்பும், சிகிச்சைகளை துவக்காமல் இருப்பவர்கள், இறுதியில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, பரிசோதனை ஒன்றே இதற்கு தீர்வு.
மாவட்டத்தில், எச்.ஐ.வி., விழிப்புணர்வு செஞ்சுருள் சங்கம் உருவாக்கப்பட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் தொடர்பான சந்தேகம் இருப்பின், 1800 419 1800 என்ற எண்ணுக்கு அழைத்து, தேவையான சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். கருவில் இருக்கும் குழந்தையை பாதுகாக்க வேண்டியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகும் கர்ப்பிணிகளுக்கு அவர்கள் ஒப்புதலுடன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
எச்.ஐ.வி., பொறுத்த வரை வயது ஒரு பொருட்டல்ல. வைரஸ் உடலுக்குள் வந்து விட்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள முடியுமே தவிர, வைரஸில் இருந்து மீண்டு வர வழியில்லை. எனவே, முடிந்த வரை பாதுகாப்புடன் வாழ வேண்டும். 'தேவையற்ற' பழக்க வழக்கம், பாதுகாப்பில்லாத உடல் உறவே எச்.ஐ.வி.,க்கு ஆரம்ப காரணமாக உள்ளது. எனவே, நாமும், நம் குடும்பமும், சமுதாயமும் தொற்று இல்லாமல் இருக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,' என்றனர்.
'உரிமை பாதையில் செல்க'
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ெஹச்.ஐ.வி., தொற்று பாதித்த நோயாளிகளுக்கு மனரீதியான ஊக்கமளிக்க, உறுதிமொழி வாசிப்பு, சமபந்தி விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு 'உரிமை பாதையில் செல்க' எனும் தலைப்பில், உறுதி மொழி சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. காரணம், எய்ட்ஸ் பாதித்தவர்கள் பல்வேறு இடங்களில் புறக்கணிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு, புகார்கள் எழுந்து வருகிறது. இதனை தவிர்க்க, அவர்களுக்கென உள்ள உரிமைகளை அவர்கள் பெற வழிகாட்ட 'உரிமை பாதையில் செல்க' எனும் உறுதிமொழி நடப்பாண்டு வெளியிடப்பட்டுள்ளது.