/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் பாதுகாப்பு படை அமைக்க முடிவு
/
உழவர் பாதுகாப்பு படை அமைக்க முடிவு
ADDED : மே 13, 2025 12:28 AM
திருப்பூர், ; கொங்கு மண்டலத்திலுள்ள தோட்டத்து வீடுகளில் வசிக்கும் முதிய தம்பதிகளை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளைடியக்கும் சம்பவம் தொடரும் நிலையில் போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட தமிழக உழவர் பாதுகாப்பு படை என்ற அமைப்பை துவக்க, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவெடுத்துள்ளது.
திருப்பூர், ஈரோடு உட்பட கொங்கு மாவட்டங்களில், ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் முதிய தம்பதியினரை தாக்கி, கொலை செய்து, வீட்டில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவம், அவ்வப்போது நடக்கிறது. கடந்த, 5 ஆண்டுகளில், தோட்டங்களில் கொள்ளை அடித்து, 15 விவசாயிகளை கொடூரமாக கொலை செய்துள்ளதாக, விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
இத்தகைய செயலில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிப்பது, போலீசாருக்கு பெரும் சவாலான விஷயமாகவே இருக்கிறது. தொடரும் இதுபோன்ற சம்பவங்கள், விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
தமிழகத்தின் கொங்கு மண்டல பகுதிகளில், சில ஆண்டுகளாக, தனியாக வசித்து வரும் விவசாயிகள், அவர்களது குடும்பத்தினரை குறி வைத்து படு கொலை செய்யும் சம்பவம் நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களும் நடக்கின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் போலீசாரின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையே நீடிக்கிறது.
ஊருக்குள் நுழையும் புதியவர்கள் குறித்த விவரம், வசிக்கும் குடும்பத்தினரின் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளூர்வாசிகள் நன்கு அறிந்து வைத்திருப்பர். எனவே, விவசாயிகளை பாதுகாக்க, அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் காவல் துறையுடன் இணைந்து, உழவர் பாதுகாப்பு படை என்ற அமைப்பை துவக்க திட்டமிட்டுள்ளோம். அந்தந்த பகுதியிலுள்ள விவசாயிகள் இந்த பாதுகாப்பு படையில் இணையலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.