/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரவள்ளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் அதிர்ச்சி
/
மரவள்ளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : நவ 21, 2024 06:59 AM
திருப்பூர்; தமிழகம் முழுவதும் மரவள்ளி பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து, விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ, 2.5 லட்சம் ஏக்கர் பரப்பில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்தாண்டு ஒரு டன், 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை கிடைத்தது. மரவள்ளி பயிருக்கு பெரிய முதலீடு, அதிகளவிலான தண்ணீர் மற்றும் தொழிலாளர் தேவை இல்லை.
இதுபோன்ற காரணங்களாலும், நல்ல விலை கிடைத்த நிலையிலும், நடப்பாண்டு ஏறத்தாழ 4 லட்சம் ஏக்கர் பரப்பில் இது சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 10 முதல் 12 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.
உற்பத்தி அதிகரிப்பு காரணமாக தற்போது இதன் விலை 5,500 முதல் 6 ஆயிரம் ரூபாய் என்ற அளவு கடுமையாக குறைந்து விட்டது. மரவள்ளி கிழங்கு மூலம் ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் தான் இதன் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகம். தமிழகத்தில் அதிகளவில் உள்ள சாக்கோ உற்பத்தி ஆலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. ஜவுளி மற்றும் பேப்பர் மில்களில் முக்கியமாக இது பயன்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள விலை நெருக்கடிக்கு முக்கிய காரணம் தமிழக அரசுக்கு உரிய பயிர் பார்வை இல்லை என்பது தான். உற்பத்தி மற்றும் தேவை குறித்த எந்த புள்ளி விவரமும் எந்த துறையிலும் இல்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது. இதனால், உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடையும் அவலம் ஏற்படுகிறது. இதனால், மரவள்ளி விளைவித்துள்ள விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.