ADDED : ஆக 16, 2025 11:43 PM
திருப்பூர்; துாய்மை பணியாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் சிறப்பு பள்ளிக்கு மதிய உணவு உரிய நேரத்துக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி 9 வது வார்டு கவுன்சிலர் திவ்யபாரதி, மேயர் மற்றும் கமிஷனருக்கு அளித்த மனு விவரம்:
அங்கேரிபாளையம், வெங்கமேடு பகுதியில் வசிக்கும் துாய்மைப் பணியாளர் குடும்பங்களைச் சேர்ந்த 51 மாணவர்கள் இங்குள்ள சிறப்பு பள்ளியில் பயில்கின்றனர்.
எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு உரிய அளவிலான வகுப்பறை, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியின்றி மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு இடையே உள்ளனர்.
இவர்களுக்கு வெங்கமேடு துவக்கப் பள்ளி வளாகத்திலிருந்து மதிய உணவு தினமும் கொண்டு வரப்படுகிறது. உரிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதியின்றி உணவு கொண்டு வருவதில் சிரமம் நிலவுகிறது.
மாணவர்களுக்கு உரிய நேரத்தில் மதிய உணவு கொண்டு வந்து வழங்க வேண்டும். இவற்றை மேற்கொள்ள விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.