sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 எஸ்.ஐ.ஆர். படிவம் திரும்ப பெறுவதில் தாமதம்; தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. குற்றச்சாட்டு

/

 எஸ்.ஐ.ஆர். படிவம் திரும்ப பெறுவதில் தாமதம்; தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. குற்றச்சாட்டு

 எஸ்.ஐ.ஆர். படிவம் திரும்ப பெறுவதில் தாமதம்; தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. குற்றச்சாட்டு

 எஸ்.ஐ.ஆர். படிவம் திரும்ப பெறுவதில் தாமதம்; தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. குற்றச்சாட்டு


ADDED : டிச 04, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 04, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அதேசமயம், தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. உள்ளிட்ட பிரதானக்கட்சி நிர்வாகிகள், எஸ்.ஐ.ஆர். படிவம் திரும்பப் பெறுவதில் தாமதம் நிலவுவதாக குற்றம்சாட்டினர்.

தமிழகத்தில், கடந்த நவ. 4ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர். கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து வழங்க, கால அவகாசம், வரும், 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், காங்கயம், தாராபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளிலும், கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதில் வாக்காளர் மிகுந்த ஆர்வம்காட்டிவருகின்றனர்.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும், வாக்காளர்களுக்கு படிவம் வழங்குதலும், பூர்த்தி செய்து பெறும் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது.

எஸ்.ஐ.ஆர். பணி85% நிறைவு: கலெக்டர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்த மாதிரி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் மனிஷ்நாரணவரே பேசுகையில், 'ஆர்வமுள்ள வாக்காளர்கள் ஒத்துழைப்பால், சிறப்பு தீவிர திருத்தப் பணி மாவட்டத்தில், 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தகுதியான வாக்காளர்களை தேர்வு செய்ய, சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படுகிறது. வீட்டில் வாங்கி வைத்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய பி.எல்.ஓ.விடம் ஒப்படைக்கும் படி பெற்றோருக்கு மாணவியர் எடுத்துரைக்க வேண்டும்,' என்றார்.

ஊரகப்பகுதிகளில் எளிது திருப்பூர், பல்லடத்தில் சிரமம் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை பொறுத்தவரை கிராமப்புற பகுதிகளே அதிகம் உள்ளன. இம்மூன்று தொகுதிகளிலும் நிரந்தர வாக்காளரே அதிக எண்ணிகையில் உள்ளனர். மேலும், குடும்பத்தில், யாரேனும் ஒரு உறுப்பினர் எப்போதும் வீட்டில் இருக்கின்றனர். வாக்காளர் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. அதனால், இந்த ஐந்து தொகுதிகளிலும், தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுவது எளிதாக உள்ளது. திருப்பூரை பொறுத்தவரை, மாவட்ட தலைநகர், மாநகராட்சி பகுதியாக உள்ளது. திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிகளில், வெளிமாவட்டம், வெளிமாநில பனியன் தொழிலாளர் அதிகம் வசிக்கின்றனர்.

பெரும்பாலான குடும்பங்களில், அனைத்து உறுப்பினர்களும் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். காலை, 8:00 மணிக்கு வேலைக்குச் செல்வோர், இரவு வேளையில்தான் வீடு திரும்புகின்றனர். மேலும், இடம்பெயர்தலும் அதிகம் நடக்கிறது. அதனாலேயே, இம்மூன்று தொகுதிகளிலும், வாக்காளர்களை கண்டறிந்து, படிவம் வழங்கி, பூர்த்தி செய்து பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

வரும் 11ம் தேதிக்குள் தகுதியுள்ள அனைத்து வாக்காளரிடமிருந்தும் படிவம் பூர்த்தி செய்து பெறும்வகையில், திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எஸ்.ஐ.ஆர். பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்ததாக கலெக்டர் கூறினாலும், தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. உள்ளிட்ட பிரதானக் கட்சியினர், இப்பணிகளில் தாமதம் நிலவுவதாக தெரிவித்தனர். இதனால், வரும் 11ம் தேதிக்குள் இப்பணி முடிவடையுமா என்ற சந்தேகத்தை, இக்கட்சியினர் எழுப்பியுள்ளனர்.

வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்

பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட செயலாளர், அ.தி.மு.க.:



திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிகளில், இறந்த வாக்காளர், இடம்பெயர்ந்த வாக்காளர் அதிகம். அவர்கள் பெயர் நிரந்தர நீக்கப்பட வேண்டுமென, கட்சி முகவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இறந்தவர் பெயர், இடம்பெயர்ந்தவர் பெயர்களை நீக்க வலியுறுத்தி வருகிறோம். இதனால்தான் திருப்பூரில் பூர்த்தி செய்த படிவங்கள் திரும்ப பெறுவது குறைந்துள்ளது. அவகாசம் நீட்டிப்பு செய்தது, ஜனநாயக ரீதியாக நல்ல முடிவு. வாக்காளர், தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டிக்கொள்ள, வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காகவே, அ.தி.மு.க., முகவர்கள், 'பூத்' வாரியாக களப்பணியாற்றி வருகின்றனர்.

பூத்துக்கு 250 வாக்காளர் குறைவர்



ஈஸ்வரமூர்த்தி, செயலாளர், கொங்கணகிரி பகுதி, தி.மு.க.:



திருப்பூர் தெற்கு, வடக்கு உள்ளிட்ட தொகுதிகளில், 58 முதல், 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே படிவங்கள் திரும்ப வந்துள்ளன; படிவம் வினியோகமே மிகவும் சிரமமாக இருந்தது; 82 சதவீத படிவம் தான் வாக்காளரை சென்று சேர்ந்துள்ளது.

பெரும்பாலான வீடுகளில், இடமாறியுள்ளனர்; சொந்த ஊரில் உள்ள ஓட்டு தான் வேண்டும் என்று, திருப்பூரில் உள்ள வெளிமாவட்ட தொழிலாளர், பெற்ற படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கவே இல்லை; இதனால்தான், படிவம் திரும்ப பெறுவது மிக குறைவாக இருக்கிறது. ஒவ்வொரு பூத்திலும், 30 முதல், 100 இறந்த வாக்காளர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன; அவர்களின் படிவம் திரும்ப வராது.

இறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே, இறந்தவர் பெயரை நீக்க வேண்டும் என்று நீக்காமல் இருந்ததுதான் காரணம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பணிகளை துவங்கியிருக்கலாம்; கூடுதல் அவகாசத்துடன் இப்பணிகளை செய்வதுதான் சிறப்பாக இருக்கும்.

இறந்த வாக்காளர், இரட்டை பதிவு, இடம்பெயர்ந்த வாக்காளர் என, ஒவ்வொரு 'பூத்'திலும், 200 முதல், 250 வாக்காளர் குறைய வாய்ப்புள்ளது.

ஆளும்கட்சியினர் தலையீடு



சீனிவாசன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர், பா.ஜ.:



திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் என, மூன்று சட்டசபை தொகுதியில், ஒவ்வொரு பூத்துக்கும் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர். இதுதவிர, ஐந்து பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதியான எந்த வாக்காளரும் விடுபட்டு விட கூடாது என்று களப்பணியில் உள்ளனர். இதில், கட்சி பாகுபடுகளின்றி தகுதியான, உண்மையான வாக்காளர்களுக்கு சென்று சேரும் வகையில் வேலை செய்து வருகிறோம். இதற்கான பல்வேறு கட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் ஆளும்கட்சியினர் தலையீடுகள் உள்ளன. இதே குழுவினர் தகுதியற்ற வாக்காளர்களை கண்டறிந்து, நீக்கவும் கட்சி ரீதியாக பணியில் உள்ளனர். கலெக்டர் உத்தரவுகள், அறிவுரை இருந்தாலும், அவை பி.எல்.ஓ., மற்றும் கடைநிலை பணியாளர்களுக்கு செல்வதில்லை. உதாரணமாக, விண்ணப்பத்தில் முதல் அட்டவணையை பூர்த்தி செய்தவர்களிடம் வாங்காமல் தட்டிக்கழிப்பதும், சில இடங்களில் முழுமையாக பூர்த்தி செய்தால்தான் வாங்குவோம் என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற காரணத்தால் தொய்வு நிலை ஏற்படுகிறது. இறந்த வாக்காளர்களின் விபரங்களை நீக்காமல் இதுவரை இருந்துள்ளது. சில காரணங்களால் தான், திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி மந்தமாக உள்ளது.

மேலும் அவகாசம் வேண்டும்



கிருஷ்ணன், மாநகர மாவட்ட தலைவர், காங்கிரஸ்:



பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களாக கட்சியினர் உள்ளனர். காலையில் வேலைக்கு செல்லும் முன், மாலை வேலை முடிந்த பின் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் அதிகாரிகள் வழங்கிய, அறிவுறுத்தல்களை பின்பற்றி, எஸ்.ஐ.ஆர். படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து வழங்க கட்சியினர் மூலம் மக்களிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும், 15 - 20 சதவீத பணி மட்டும் பாக்கியுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள அவகாசம் போதுமானது. இருப்பினும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாமல் பலர் உள்ளனர். பி.எல்.ஓ. உடன் வருவோர் திறம்பட பணியாற்ற, மேலும் அவகாசம் வழங்கினால், எஸ்.ஐ.ஆர். பணி நுாறு சதவீதம் முழுமையாக நடக்கும்.

வாக்காளர்களிடம் குழப்பம்



பாலமுருகன், மாநகர மாவட்ட செயலாளர், த.வெ.க.:



திருப்பூர் தெற்கு தொகுதியில், 245 பூத்; வடக்கில், 386 பூத்களிலும் எங்கள் கட்சி நிர்வாகிகள் எஸ்.ஐஆர். படிவம் பூர்த்தி செய்து கொடுப்பது தொடர்பான விழிப்புணர்வை, வாக்காளர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், பலர், வீடு மாறி, ஊர் மாறி சென்றுள்ளனர். அவர்களை, பி.எல்.ஓ.க்களால் கண்டறிய முடியவில்லை; பலரது, தொடர்பு எண்கள் கூட இல்லை. இதனால், பி.எல்.ஓ.க்கள் ஒரே இடத்தில் அமர்ந்து, மொபைல்போன் வாயிலாக வாக்காளர்களை வரவழைத்து படிவம் வழங்குகின்றனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள், பி.எல்.ஓ.க்களின் வீடு தேடி வந்து படிவம் வாங்கிச் சென்று, பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். அதே நேரம், படிவம் பூர்த்தி செய்து கொடுப்பதில், வாக்காளர்கள் குழப்பமடைகின்றனர். இதனால், படிவத்தை திரும்ப வழங்காமலே உள்ளனர். எங்களின் களப்பணி வாயிலாக, ஒவ்வொரு பூத்திலும், குறைந்தது, 20 சதவீதம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படுவதற்கான சூழல் உள்ளது

வெற்றி தீர்மானிக்கும் சக்தி



சுரேஷ் பாபு, மாநில இணைச் செயலாளர், நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை:



திருப்பூரை பொறுத்தவரை, இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்; அவர்கள், 2002 வாக்காளர் பட்டியல் விவரங்களை சேகரிக்க திணறுகின்றனர்; எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வதிலேயே அவர்களிடம் பெருங்குழப்பத்தை காணமுடிகிறது. தங்கள் மாநில வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட பீஹார் மாநில தொழிலாளர்கள், மிக எளிதாக தமிழக வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்வர்; இதனால், தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக அவர்கள் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வட மாநில தொழிலாளர்கள் இங்கு தொழில் செய்யலாம்; வருவாய் ஈட்டலாம்; ஆனால், ஓட்டுரிமை கூடாது என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்கிறோம்.






      Dinamalar
      Follow us