/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய மின் இணைப்பு வழங்குவதில் இழுபறி ஒன்றரை ஆண்டாக 'தட்கல்' முறையும் முடக்கம்
/
விவசாய மின் இணைப்பு வழங்குவதில் இழுபறி ஒன்றரை ஆண்டாக 'தட்கல்' முறையும் முடக்கம்
விவசாய மின் இணைப்பு வழங்குவதில் இழுபறி ஒன்றரை ஆண்டாக 'தட்கல்' முறையும் முடக்கம்
விவசாய மின் இணைப்பு வழங்குவதில் இழுபறி ஒன்றரை ஆண்டாக 'தட்கல்' முறையும் முடக்கம்
ADDED : ஜூலை 12, 2025 08:00 PM
உடுமலை:தமிழகத்தில், விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் ஒன்றரை ஆண்டுகளாக செயல்படுத்தப்படாததால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களின் கீழ், மின் வாரியம் சார்பில், பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், சாதாரண முறையில் பதிவு செய்த விவசாயிகளில், 2003 வரை மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின், பதிவு செய்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. அதே போல், 25,000 மற்றும், 50,000 ரூபாய் செலுத்தி பதிவு செய்த விவசாயிகளில், 2018 வரை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின், பதிவு செய்த பல ஆயிரம் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு உடனடி மின் இணைப்பு வழங்கும் 'தட்கல்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 5 எச்.பி., முதல், 10 எச்.பி., வரை, 2.50 லட்சம் முதல், 4.50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு, உடனடி மின் இணைப்பு வழங்கப்பட்டது.
ஆனால், 2024 ஏப்., முதல், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாமல், மின் வாரிய 'போர்ட்டல்' முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்கும் நடைமுறை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆண்டுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்குவதாக அறிவித்து, முதல் இரு ஆண்டுகள் முறையாக செயல்படுத்தி, 1.80 லட்சம் இணைப்பு வரை வழங்கியது.
அதன்பின், இத்திட்டம் செயல்படுத்தப்படாமலும், முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து, மின் கம்பிகள், மின் கம்பங்கள் அமைத்து தயார் நிலை சான்று பெற்றவர்களுக்கு கூட, மின் இணைப்புகள் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
எனவே, விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்தவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு வழங்கவும், 'தட்கல்' முறையில் உடனடி மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும் வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்திஉள்ளனர்.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விவசாய மின் இணைப்பு கோரி, தமிழகம் முழுதும் விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஒன்றரை ஆண்டாக, மின் இணைப்பு வழங்கும் பணி முடங்கியுள்ளது. அரசும், மின் வாரியமும் அனுமதியளித்தால், மின் இணைப்புகள் வழங்கலாம்' என்றார்.