ADDED : நவ 06, 2025 04:29 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், ஜன. முதல் அக். வரை பத்து மாதத்தில், 109 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பாதிப்பு இல்லாததால், மாவட்ட சுகாதாரத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:
வாரம் ஒன்று அல்லது மூன்று பேர் வரை டெங்கு பாதிப்பு தெரியவருகிறது. மழை பெய்து முடிந்து வெயில் பதிவாகும் போதும், சீதோஷ்ண நிலை மாற்றத்தின் போதும் காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகரிக்கும்.
நடப்பாண்டில், கடந்த பத்து மாதத்தில், 109 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு இல்லை.
டெங்கு பாதிப்பில் முதல், 10 இடங்களுக்குள் இருந்த திருப்பூர், தற்போது, 17வது இடத்துக்கு வந்துள்ளது. டெங்கு கட்டுக்குள் உள்ளது. இருப்பினும், டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு தொடர்ந்து வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

