/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிறைவடையும் நிலையில் 'டிசைன் ஸ்டுடியோ'
/
நிறைவடையும் நிலையில் 'டிசைன் ஸ்டுடியோ'
ADDED : பிப் 13, 2025 07:15 AM

திருப்பூர்; திருப்பூர் ஏற்றுமதியாளரின் ஐந்தாண்டு கால முயற்சியின் பயனாக, மத்திய, மாநில அரசுகளின் 80 சதவீத மானியத்துடன், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 'டிசைன் ஸ்டுடியோ' பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அடுத்தகட்டத்துக்கு உயர வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகளின் நேரடி ஊக்குவிப்பும், சலுகையும் மிகமிக அவசியம். குறிப்பாக, திருப்பூரில், 'டிசைன் ஸ்டுடியோ' அமைய வேண்டும் என்ற கனவு, 15 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதுநாள் வரை, வெளிநாட்டு வர்த்தகர்கள் அனுப்பும் டிசைனில், ஆடைகள் தயாரிப்பது கொடுப்பது மட்டுமே திருப்பூரின் பணியாக இருக்கிறது.
சொந்தமாக டிசைன் உருவாக்கி, 'சாம்பிள்' ஆடைகள் தைத்து அனுப்பி, அதுதொடர்பாக போட்டோ ஷூட் நடத்தி, வர்த்தகர்களிடம் வியாபாரம் பேசும் உயர்நிலையை திருப்பூர் அடைய வேண்டும்; அதற்கு, நிச்சயமாக, 'டிசைன் ஸ்டுடியோ' இங்கே இருக்க வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கரம் கோர்த்து, 'திருப்பூர் பேஷன் கிளஸ்டர்' என்ற நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின், 20 சதவீத பங்களிப்புடன், 'டிசைன் ஸ்டுடியோ' அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறையின், 70 சதவீத பங்களிப்பும், தமிழக அரசின் 'சிட்கோ' திட்டத்தில், 10 சதவீதம் பங்களிப்புடன் நவீன 'டிசைன் ஸ்டுடியோ' அமைய உள்ளது.
முழுவீச்சில் தயார்
மத்திய அரசின் அங்கீகார அனுமதி கிடைத்துவிட்டதால், முதல்கட்ட இயக்க பணிகளுக்கு, 'டிசைன் ஸ்டுடியோ' முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
திருப்பூரிலேயே சொந்தமாக, 'டிசைன்' படைப்புகளை மேற்கொள்ளலாம். அதன் அடிப்படையில், புதிய ஆடை ரகங்களை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யலாம். பல்வேறு வகையான ஆய்வுகளையும், தர பரிசோதனைகளையும் செய்து முடிக்க தேவையான வசதிகளும் உள்ளன.
'டிசைன்' வடிவமைப்பு துவங்கி, ஆடை ரகங்களை வடிவமைப்பது, அவற்றை 'பேஷன் ேஷா' மூலம் காட்சிப்படுத்தவும் வசதியுள்ளது. வெளிநாட்டு வர்த்தகர், 'வீடியோ கான்பரன்ஸ்' போன்ற தொழில்நுட்பத்தில், நேரடியாக பார்வையிடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆடை உற்பத்திக்காக, 'டிசைன்' உருவாக்கி, ஆடைகளை வடிவமைத்து, 'பேஷன் ேஷா' நடத்துவது வரை, அதிகபட்சம், 24 மணி நேரத்தில் செய்து ஒப்புதல் பெறுவது சாத்தியமாகும். இங்கு, 3டி 'ஸ்கேனிங்', 3டி 'பிட்டிங்' போன்ற தொழில்நுட் பமும் செய்யப்படும்.
உள்நாட்டு நிறுவனத்தினருக்கும்...
ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் இதனால் பயன்பெறலாம். ஆடை வடிவமைப்பு, போட்டோ ஷூட், 'கேட்லாக்' தயாரிப்பு, விளம்பர வடிவமைப்பு போன்ற சேவைகளையும் இங்கு தத்ரூபமாக பெறலாம்.
திருப்பூரில் அமைய உள்ள 'டிசைன் ஸ்டுடியோ', பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்பது, ஒட்டுமொத்த பின்னலாடை தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
'டிசைன்' செலவு
90 சதவீதம் சேமிப்பு
டிசைன் ஸ்டுடியோ, 15 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பூரில் அமைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகால முயற்சி இன்று வெற்றியடைந்துள்ளது. திருப்பூரின் நீண்டநாள் கனவாக இருந்த, 'டிசைன் ஸ்டுடியோ' திருப்பூரில் திறக்கப்பட உள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை டிசைன், வடிவமைப்பு, சாம்பிள் ஆடை தயாரிப்பு என, அனைத்து பணியும் எளிதாகும். வர்த்தகர் வழங்கும் டிசைனில் ஆடை தைத்த நிலைமாறி, திருப்பூர் ஏற்றுமதியாளர்களே சொந்தமாக டிசைன் உருவாக்க முடியும். இதன்மூலம் வழக்கமான 'டிசைன்' செலவில், 90 சதவீதம் வரை சேமிக்கப்படும்.
- ராஜா சண்முகம்,
வழிகாட்டி ஆலோசகர், டிசைன் ஸ்டுடியோ.