/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்கில் விதி மீறி தீ வைத்து அழிப்பு; புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு
/
குப்பை கிடங்கில் விதி மீறி தீ வைத்து அழிப்பு; புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு
குப்பை கிடங்கில் விதி மீறி தீ வைத்து அழிப்பு; புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு
குப்பை கிடங்கில் விதி மீறி தீ வைத்து அழிப்பு; புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு
ADDED : செப் 26, 2024 11:27 PM
உடுமலை : உடுமலை - தாராபுரம் ரோட்டிலுள்ள குப்பைக்கிடங்கில், குப்பை கிளறப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
உடுமலை, தாராபுரம் ரோட்டில், சிவசக்தி காலனி பகுதியில், பழைய நகராட்சி குப்பை கிடங்கு, நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
நகராட்சி மற்றும் பெரிய கோட்டை ஊராட்சிக்கு சொந்தமான, 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பை கிடங்கில், பல அடி உயரத்திற்கு, மலைபோல் குப்பை தேங்கியுள்ளது.
இதனைச்சுற்றிலும், சிவசக்தி காலனி, காந்திநகர் - 2, 3 மற்றும் 4, புஷ்பகிரி வேலன் நகர், காமராஜர் நகர், வாசுகி நகர், செல்லம் நகர் என ஏராளமான குடியிருப்புகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
நகராட்சி குப்பைக்கிடங்கு, அப்பகுதி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, 20 ஆண்டுக்கு முன், கணபதிபாளையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், பல அடி உயரத்திற்கு தேங்கியிருந்த குப்பை அகற்றப்படவில்லை.
மேலும், தொடர்ந்து இப்பகுதியில், சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்கள், நகர பகுதியிலிருந்து, குப்பை, இறைச்சி, மீன் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சுகாதார கேடு, ஈ உற்பத்தி, தெரு நாய்கள் தொல்லை என பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், பழைய குப்பை கிடங்கு பகுதியில், ஊராட்சி, நகராட்சி பகுதியிலிருந்து குப்பை கொண்டு வந்து கொட்டி, தினமும் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
பழைய குப்பையுடன், புதிய குப்பையும் இணைந்து, எரிந்து, குடியிருப்பு பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி வருகிறது.
எனவே, குப்பையை முழுமையாக அகற்றி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, பூங்கா, நடை பயிற்சி மையம், பஸ் ஸ்டாண்ட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நகருக்கு வெளியில் மருத்துவமனை என பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும், என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகராட்சி சார்பில், குப்பை, கழிவுகள் கனரக இயந்திரங்கள் வாயிலாக, மீண்டும் எடுத்து, மறு பக்கம் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
காற்றின் வேகம் அதிகரிப்பு, வெயில் காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு, தீ பரவி, குப்பைக்கிடங்கு பகுதி முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
விதி மீறி குப்பை கிளறப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதால், சுற்றிலும் உள்ள வீடுகள் புகையால் சூழல்பட்டு, பொதுமக்கள், முதியவர்கள், குழந்தைகள், கண் எரிச்சல் மற்றும் சுவாசிக்க முடியாமல், திணறி வருகின்றனர். எனவே, நகராட்சி குப்பை கிடங்கை முழுமையாக அகற்றவும், நகராட்சி திட்டமிட்டபடி, பூங்கா அல்லது சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.