/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கோவிந்தா' கோஷமிட்டு மனமுருகிய பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு கோலாகலம்
/
'கோவிந்தா' கோஷமிட்டு மனமுருகிய பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு கோலாகலம்
'கோவிந்தா' கோஷமிட்டு மனமுருகிய பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு கோலாகலம்
'கோவிந்தா' கோஷமிட்டு மனமுருகிய பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு கோலாகலம்
ADDED : செப் 22, 2024 05:30 AM

திருப்பூர், : பெருமாளுக்கு உகந்த மாதமாகிய புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, பெருமாளை வணங்குவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில் நேற்று, புரட்டாசி வழிபாடு கோலாகலமாக நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீவீரராகவர், பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார். திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை வரை, கொடிமரம் அருகே வீற்றிருந்து அருள்பாலித்தார்.
பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில், கோவில் நிழல்கூடத்துக்கு, வரிசை அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள், துளசி மாலை மற்றும் நெல்லிக்கனி மாலை சாற்றி, பெருமாளை வழிபட்டனர். பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், காலை மற்றும் மாலை நேரங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
தாசர்களின் மயார் பூஜை
கோவில் வாசலில், பெருமாள் தாசர்கள் சங்கு, சேகண்டி ஒலி எழுப்பியபடி, மயார்பூஜை செய்தனர். பக்தர்கள், அரிசி, பருப்பு, காய்கறிகளை, தலைவாழை இலையில் சமர்ப்பித்தனர்; சங்குநாதம் எழுப்பியபடி, தாசர்கள் ஆசி வழங்கினர். மேலும், அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை சேகண்டி தட்டில் வைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், அவிநாசி காரணப்பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம் அரங்கநாதபெருமாள் கோவில்.
வேலம்பட்டி வரதராஜ பெருமாள்கோவில், பெருந்தொழுவு பெருமாள் கோவில், மங்கலம் மற்றும் பெருமாநல்லுார் ஆதிகேசவ பெருமாள் கோவில்கள், கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில்.
கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரப்புத்துார் காரணப்பெருமாள் கோவில், சாமளாபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், சுவாமி புறப்பாடு, அன்னதானம், தாசர்களின் மயார் பூஜை வழிபாடுகள் நடந்தது.